உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நோயில் நான் அரசியல் செய்வதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். அடையாளம் காணப்படாத 'கூவத்தூர் நோயினால் நடந்த அரசியல் விபத்தால்' முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நாடு மறந்துவிடாது.

கரோனாவில் நான் அரசியல் செய்வதாக இருந்தால், முதல்வருக்கு எந்த ஆலோசனையும் சொல்லாமல் வாய்மூடி இருந்திருக்க வேண்டும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்காமல் இருந்திருக்க வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் நான் இருந்தால்தான் அரசியல் செய்வதாக அர்த்தம்.

மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பேர் அரசியல் அல்ல; அக்கறை. தமிழ்நாட்டு மக்கள் மீதான தணியாத அக்கறையில்தான் திமுக எப்போதும் செயல்படுகிறது. அந்த நல்லெண்ணத்தையும் உயர்ந்த நோக்கத்தையும் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்றைய முதல்வருக்கு இல்லை; என்ன செய்வது தமிழகம் செய்த தவப்பயன்!

ஆரம்பத்தில் இருந்தே, "தமிழகத்தில் கரோனா நோய் இல்லை" என்று மறைக்கும் திசைதிருப்பல் அரசியலை எடப்பாடி பழனிசாமி செய்தார். பொய்யும் புரட்டும் நிறைந்த அந்த நடவடிக்கையின் விளைவுகளைத் தான் தமிழகம் இன்று கண்டு கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் எதிர்க்கட்சிகள் அந்த மாநில அரசுக்கு ஒத்துழைப்பு செய்வதாகவும், தமிழகத்தில்தான் அது இல்லை என்றும் சொல்லி இருக்கிறார் முதல்வர். மற்ற மாநில முதல்வர்கள், அனைத்துக்கட்சிக் கூட்டங்களைக் கூட்டி, அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து கலந்தாலோசனை செய்துதான் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

பிரதமரே அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்திவிட்டுத் தான் செயல்படுகிறார். ஆனால், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை எல்லா வாசல்களையும் அடைத்துக் கொண்டு விட்டார்; தன்னைப் பற்றியே நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டு தனி அறையில் இருந்து விட்டார். எல்லாம் தனக்குத் தெரியும், தன்னால் எல்லாம் முடியும் என்ற தன்முனைப்பு கொண்டவராக மாறிவிட்டார். அதனால்தான் எதிர்க்கட்சிகள் நித்தமும் நெடுஞ்சாலைகளிலே நின்றுகொண்டு ஆலோசனைகளைச் சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

குறை சொல்வதற்காகவே, திமுகவை நடத்துவதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். 'காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல', நாங்கள் சொல்லும் ஆலோசனைகள் கூட அவருக்குக் குறைகளாகத் தெரிகின்றன. நாங்கள் இன்னும் குறைகள் சொல்ல ஆரம்பிக்கவில்லை.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலிருந்த தாமதம், மெத்தனம், அலட்சியம், அரசு நிர்வாகத்தின் மீதான புகார்கள், ஜனவரி இறுதியிலிருந்து சுகாதாரத் துறை கொள்முதல்களில் அரங்கேறிய மர்மங்கள், மத்திய அரசிடம் எதையும் வாதாடிப் பெற முடியாமல் போவதற்கான உண்மையான காரணங்கள், பலவீனங்கள், கரோனாவை வைத்து ஆளும் அமைச்சரவைக்குள் நடக்கும் கீழ்மையான அரசியல் எதிர்வினைகள், அவை குறித்தெல்லாம் நாங்கள் இன்னும் பேசவில்லை; எப்போதும் பேசத்தயார்!

ஆனால், இப்போது வேண்டாம், அரசின் கவனத்தை திசைதிருப்பிடக் கூடாது, அதனால் ஏழை - எளியோர் பாதிக்கப்படக் கூடாது என்று அமைதி காத்து வருகிறோம். மீண்டும் முதல்வருக்குச் சொல்வது, அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல. நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள். நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும்.

உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன். 'கரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள்.

என்னுடைய இந்த விளக்கத்தைக் கண்டு பதறாமல், 'பார் இதற்கும் பதிலளிக்கிறேன் பேர்வழி' என்று, இருக்கும் நேரத்தையும் வீணாக்காமல், கரோனா தடுப்பு- உபகரணங்கள் கொள்முதல் - பரவலான பரிசோதனை - பாங்கான சிகிச்சை - சிறந்த நிவாரணம் - சீரான மறுவாழ்வு ஆகிய ஆக்கபூர்வமான அணுகுமுறைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, செம்மையாகச் செயலாற்றி, தமிழ் மக்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.