edappadi talks about teynampet bomb blast
மண்ணெண்ணைய் குண்டு வீச்சுக்கு ஆளான தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் சாலை தூசிகள் படிந்துள்ளதால் உருவங்கள் சரியாக தெரியவில்லை என்றும் சந்தேகத்தின்பேரில் 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை இ 3 காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை மண்ணெண்ணை குண்டு வீச்சு நடைபெற்றது. குண்டு வீச்சு நடத்திய மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் நிலைய வளாகத்துக்குள் மண்ணெண்ணை குண்டு வீச்சு நடந்ததால் அங்கு நின்றிருந்த இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
காவல் நிலையத்தில் மண்ணெண்ணை குண்டு வீச்சு நடந்தது குறித்து சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது. தமிழகத்தில் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பு இல்லை எனவும், குண்டு வீசி சென்றவர்களை காவல் துறை இன்னும் கைது செய்யாத நிலை உள்ளதாகவும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேனாம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் மண்ணெண்ணைய் குண்டு வீசப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 15 பேரில் ஒருவரின் முகம் சிசிடிவி பதிவில் காணப்படும் ஒருவரின் முகத்துடன் ஒத்துப்போவதால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். சிசிடிவி கேமராவில், சாலை தூசுகள் படிந்துள்ளதால் உருவங்கள் சரியாக தெரியவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
