தமிழக உளவுத் துறை  தேர்தல் பிரசசாரக் களங்களில் ஊடுருவி தற்போதை நிலை குறித்த நாள்தோறும் ரிப்போர்ட் அளித்து வருகிறது, இந்நிலையில் கடந்த  ஒரு வார காலமாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின்  பிரச்சாரக் கூட்டங்களில் கூடிய அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களின் கருத்துகளை உளவுத் துறை ஒரு ரிப்போர்ட்டாக அளித்துள்ளது. இதைப்  பார்த்த எடப்பாடி அதிர்ந்து போய்விட்டார்.

முதலமைச்சர் பேசிய பிரச்சாரக் கூட்டங்களில் கட்சியின் மறைந்த தலைவர் ஜெயலலிதாவையோ, எம்ஜிஆரையோ பற்றி பேசாமல் மோடியைப் பற்றியே அதிகம் பேசி வருகிறார். இதை அதிமுக தொண்டர்கள்,நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

இந்த ஆட்சியே ஜெயலலிதா கொடுத்ததுதான், ஆனால் எடப்பாடியோ தனது பேச்சில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதையே மையமாக வைத்துப் பேசுகிறார். இது மக்களவைத் தேர்தல்தான். ஆனால் மக்களிடம் ஜெயலிதாவைப் பற்றியோ எம்ஜிஆரைப் பற்றியோ பேசினால்தான் எடுபடும்

திமுக தலைவர் ஸ்டாலின்  கடந்த ஒரு வாரமாக திருவாரூர், தஞ்சை, தரும்புரி, தேனி உள்ளிட்ட இடங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதே நேரத்தில் ஸ்டாலின் பேசும்போது தான் , திமுக தலைவராக இங்கே வரவில்லை. கலைஞரின் மகனாக ஓட்டுக் கேட்கிறேன்’ என்றே  கூறி வருகிறார். இது பொது மக்களிடையே நன்றாக எடுபடுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஜெயலலிதாவைப் பற்றி மிகக் குறைவாக பேசிவிட்டு மோடியைப் பற்றியே அதிகம் பேசுகிறார். 

தமிழகத்தில் ஜெயலலிதாவைப் பற்றி பேசினால்தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதை தினகரன் சரியாகப் பின்பற்றி வருகிறார். எனவே பிரச்சாரத்தில் ஜெயலிதாவைப் பற்றி அதிகம் பேச வேண்டும் என உளவுத்துறை  அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து எடப்பாடியின் பிரச்சாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மோடி புராணம் குறைக்கப்பட்டு ஜெயலலிதா புராணம் அதிகரிக்கப்படும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.