மத்திய அரசு கடந்த வாரம் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில் மாநிலங்கள் மூன்றாவதாக ஒரு மொழியை ஏற்றுக் கொள்ளவேண்டும் அதாவது கட்டாயமாக  ஹிந்தி படிக்க வேண்டும் என அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருந்ததார்.

இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழை பிற மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர்  தெரிவிப்பது, தமிழகத்தில் ஹிந்தியை ஏற்றுக் கொள்ளத்தான் என எதிர்கட்சித் தலைவர்கள் வெளுத்து வாங்கி விட்டனர். இதையடுத்து அவர் தனது டுவிட்டர் பதிவை நீக்கினார்.

இந்நிலையில் நாளை சேலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்தில் கொண்டுவர நினைக்கும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இங்கு மொழிக் கொள்கையே செயல்படுத்தப்படும் எனவும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழை பிற மாநிலத்தவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் டுவிட்டரில் பதிவிட்டதாகவும் ஆனால் சிலர் அதை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது  என்றும் மும்மொழிக் கொள்கையை தான் ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் எடப்பாடி தெரிவித்தார்.

அமமுகவில் இருந்து அனைவரும் விரைவில் அதிமுகவில் இணைந்து விடுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.