கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்து கொண்டால்  பதவி தானாக தேடி வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது  பேசிய அவர், ஏழைகளின் பசியை போக்க அம்மா உணவகத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார் என்றும்   சத்துணவு திட்டத்திற்கு இணையாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகம் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்றார்.

திரையுலகில் புகழின் உச்சம் தொட்டது போல் அரசியலிலும் புகழின் உச்சத்தை தொட்டவர் எம்.ஜி.ஆர் என்றும்,  உலகிலேயே மக்கள் நலனுக்காக திரை ஊடகத்தை பயன்படுத்தியவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான் என்றும் தெரிவித்தார்.

அதிமுக தற்போதும் ஒரு இரும்பு கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. எனக்கு பிறகும் 100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்ற ஜெயலலிதாவின் கூற்றை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம் என்றும் படப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நல்ல பதவி வேண்டும் என்றால் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.