திமுக நாளேடான முரசொலி, மறந்து போச்சா மருத்துவரே... என தொடர் எழுதி வருகிறது. அதில், ‘’கழகத்தின் கதை என்று நீங்கள் ஒரு புத்தகம் எழுதினீர்கள் ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே? ஜெயலலிதா, சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் ஆகியோரது அட்டூழியங்களை தொகுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்தீர்கள்.  

‘’ஆற்று மணல் ஊழல், தாது மணல் ஊழல், கிராணைட் ஊழல், கட்டுமானப்பணிகள் ஒப்பந்த ஊழல், பணி நியமன ஊழல், நெடுஞ்சாலை ஊழல், பருப்பு மற்றும் முட்டை கொள்முதல் ஊழல் ஆகியவற்றில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 70- லட்சம் கோடி ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக தாது மணல் ஊழலின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 50 லட்சம் கோடி.

 

ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம்,  எடப்பாடி பழனிசாமி, பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் ஆகியோர் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்துக்குச் சரியாக கணக்குக் காட்டவில்லை என்பதற்காக, அவர்களது வீடுகளில் ஜெயலலிதா அனுப்பிய தனிப்படை அதிரடி ஆய்வு நடத்தியது. இதில் சுமார் 30 ஆயிரம் கோடி அளவுக்கு ஆட்சி மேலிடத்துக்கு கணக்கில் காட்டப்படாமல் சொத்துக்கள் குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டன. 

இவ்வளவுக்குப் பிறகும் மேற்கண்ட அமைச்சர்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது’’ இதையெல்லாம் எழுதியது நீங்கள் தானே மருத்துவரே? என கேள்வி எழுப்பி இருக்கிறது.