edappadi ready to pay Rs100 crores for me thanga thamilselvanvan...
மதுரை
நான் ஒரு கடைக்கண் பார்வையை காட்டினால் போதும், எடப்பாடி ரூ.100 கோடி கொடுக்க கூட தயாராக இருக்கிறார் என்று தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.
பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் டெபாசிட் இழக்கும் என்று தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனி சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இதற்கு தெற்கு மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.
இதில், தங்க தமிழ்ச்செல்வன், “18 எம்.எல்.ஏக்களை நீக்கியதும், அதனை விசாரணை என்ற பெயரில் காலம் தாழ்த்துவதும் சூழ்ச்சியான அரசியல் நடத்துவதை காட்டுகிறது.
இப்போதைய அமைச்சர்கள் வருகிற எந்த தேர்தலிலும் நிற்க முடியாது, மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டனர்.
உண்மையான அ.தி.மு.க.வினர் அனைவரும் அ.ம.மு.க.வில் உள்ளனர்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் நிச்சயம் டெபாசிட்டை இழக்கும்.
இப்போதைய நிலையில் நான் ஒரு கடைக்கண் பார்வையை காட்டினால் போதும், எடப்பாடி ரூ.100 கோடி கொடுக்க கூட தயாராக இருக்கிறார். எங்களுக்கு பணம் முக்கியமில்லை, மக்களின் நலன்தான் முக்கியம்.
டி.டி.வி.தினகரன் தலைமையிலான ஆட்சி அமையும் வரை மக்களிடம் நம்பிக்கை துரோகிகளின் செயல்பாடுகளை எடுத்து கூறுவோம்” என்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாநில இளைஞரணிச் செயலாளர் டேவிட் அண்ணாத்துரை, சேடபட்டி ஒன்றியச் செயலாளர் துரை.தனராஜன், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணி, உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் சேதுராமன்,
நகரச் செயலாளர் குணசேகரபாண்டியன், எழுமலை பேரூர் கழக செயலாளர் பக்ரூதீன், பேரவைச் செயலாளர் ஜோதிதண்டியப்பன், வழக்கறிஞரணி செயலாளர் வீரபிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
