அ.ம.மு.க ஒரு பதிவு செய்யப்படாத கட்சி. குழந்தையே பிறக்காமல், பெயர் வைத்துக்கொண்டு அலைவதுபோல் அக்கட்சியினர் பேசி வருகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தி, முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது, மக்களவை தேர்தலில், தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவே வியக்கும் வகையில் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக அவர் கூறினார். திமுக கூட்டணி சுயநல கூட்டணி என்ற அவர், சுயநலவாதிகளின் சதியினால் 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்காக இடைதேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கட்சி திமுக எனவும் அவர் விமர்சித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், பிரதமர் மோடியால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும். பிரதமர் மோடி மீண்டும் பிரச்சாரத்திற்காக தமிழக வர உள்ளார். 3 அல்லது 4 மாவட்ட தலைநகரங்களில் அவர் பிரசாரம் செய்கிறார். அ.ம.மு.க. கட்சி ஒரு பதிவு செய்யாத கட்சி. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தையே பிறக்காமல், பெயர் வைத்துக்கொண்டு அலைவதுபோல் பேசி வருகிறார்கள். அவர்களை நாங்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றார். 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் தெரிவித்து உள்ளோம். ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வெறும் வெற்று அறிவிப்புகள்தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மக்களவை தேர்தல் தொடர்பாக வெளியானது கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு என்று விமர்சனம் செய்துள்ளார்.