எனது கோரிக்கையை ஏற்றது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.! அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 106-ஆவது பிறந்த நாளை, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வகைகளில் சிறப்பாகக் கொண்டாடிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்
எம்ஜிஆர் பிறந்தநாளில் மீண்டும் அதிமுகவை ஆட்சி கட்டிலில் ஏற்றுவோம் என வீர சபதம் ஏற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 ஆண்டுகளுக்கு முன்பு இப்பூவுலகை விட்டு மரைத்தும், இன்றுவரை பல கோடிக்கணக்கானவர்களின் உள்ளங்களில் மறையாமல் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் 'பொன்மனச் செம்மல்' இதய தெய்வம், புரட்சித் தலைவரின் 106-ஆவது பிறந்த நாளான இன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என்னால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உலகெங்கும் வாழும் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.
மகிழ்ச்சி அடைகிறேன்-இபிஎஸ்
குறிப்பாக, தமிழகம் முழுவதும், பட்டிதொட்டியெங்கும் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அளிக்கும் உத்வேகத்துடன் அவரது பிறந்த நாள், எழுச்சித் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு, கழக முன்னோடிகள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். குறிப்பாகவும், சிறப்பாகவும், நமது தலைமைக் கழகமாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாளிகையிலும், அதனைச் சுற்றியுள்ள சாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் ஆர்ப்பரித்து நின்று புரட்சித் தலைவர் புகழ் பாடியது கண்டு, உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மீண்டும் ஆட்சியில் அதிமுக
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத எம்.ஜி.ஆர். புகழ் என்று துந்துபி முழங்கி, அராஜக திமுக ஆட்சியை அகற்ற ஆர்ப்பரித்து நிற்கும் அனைத்து தீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். உறுதி, உழைப்பு, உயர்வு என்ற எண்ணத்துடன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், மீண்டும் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவோம்; ஏழை, எளியவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று இந்த நன்னாளில் வீரசபதம் ஏற்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.