பெற்ற தந்தையே இவரை நம்பாத பொழுது தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைப்பார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ’’திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகிறார். முதல்வர் பதவி என்பது மக்களால் அளிக்கப்படுகின்ற பதவி. அம்மா முதல்வராக இருந்த போது மரணம் அடைந்தார். அதன் பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று நான் முதல்வராக இருந்து வருகிறேன்.

நடைபெறுகின்ற 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். இந்த ஆட்சி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவராக கருணாநிதி இருந்தார். அவர் முழுமையாக செயல் படாத நிலையில் கூட தனது தலைவர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை. மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகவே இருந்தார். கருணாநிதியின் மறைவிற்கு பிறகுதான் திமுகவின் தலைவரானார். பெற்ற தந்தையே இவரை நம்பாத பொழுது தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு இவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்.

ஒரு விவசாயி நாட்டை ஆளாலாமா என்று ஸ்டாலின் கேட்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை இனிமேல் ஒரு விவசாயிதான் நாட்டை ஆள முடியும் என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக என்றாலே அராஜகம் தான். அழகு நிலையத்திற்கு சென்று பெண்களின் மீது தாக்குதல் நடத்துவது, பிரியாணி கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது, செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது போன்ற பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருவது திமுகவினர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கின்ற அளவுக்கு அவர் சுதந்திரமாக நடமாட முடிந்தது என்றால் இது ஒன்றே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சி’’ என அவர் தெரிவித்துள்ளார். இதையும் படிங்க.. ’காங்கிரஸில் சேர்ந்து தமிழகத்தை விட்டுப் போகிறார் மு.க.ஸ்டாலின்...’ அடித்துச் சொல்லும் அமைச்சர்..!