முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடாக உறவினர்களுக்கு எடப்பாடி வழங்கியதாக முதலமைச்சர் எடப்பாடி மீது திமுக வழக்கு தொடர்ந்தது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தபோது, நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களான பி.சுப்பிரமணியம், சந்திரகாந்த் ராமலிங்கம், எஸ்.பி.கே. நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளார். 

கடந்த 7 ஆண்டுகளாக அவரின் நெருங்கிய உறவினர்களான ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மே மாதம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 

ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்காததால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும். தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக மனுதாரர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் உள்ளிட்ட அனைத்து ஆதார ஆவணங்களையும், லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வார காலத்துக்குள் சிபிஐ  இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.