ஒரு அரசியல் இயக்கம் மிகப்பெரிய ஆளுமையுடனும், உத்வேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டிய நேரம் எதுவென்றால் அது...எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் வேளைகளில்தான். ஆளும் கட்சியை விட ஆயிரம் மடங்கு பாய்ச்சல் காட்டி, அது மக்களின் மனதில் பசையாய் ஒட்டிக் கொண்டால் மட்டுமே அடுத்து வரும் தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய முடியும். 

தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.  விளக்க ஒண்ணா களேபரங்களுக்கு ஆளாகி கிடக்கும் இந்த வேளையில் ‘செயல்படுகிறாரா தி.மு.க.வின் செயல்தலைவர்?’ என்று அவர் மீது அரசியல் ரீதியிலான எதிர்மறை விமர்சனங்கள் மிக அழுத்தமாக விழுந்து கொண்டிருக்கின்றன தான். ஆனாலும் அதைத்தாண்டி மக்கள் நல பணிகளில் ஸ்டாலின் காட்டும் சில பாய்ச்சல்கள் ஆளும் அமைப்பை அதிர வைத்திருக்கின்றன என்பது மெய்யே!

சுமார் 140 ஆண்டுகளுக்கு பிறகு மிக கொடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருப்பதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா மேடைகளிலும் கூட கசிந்துருகிக் கொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் ஸ்டாலினோ சட்டென்று இருக்கும் நீரை காப்பாற்றிக் கொள்ளவும், பெய்யும் சிறு மழைநீரையும் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டும் தமிழகம் முழுக்க குளங்களை தூர்வாரும் பணியை துவக்கினார். ‘கோயில் குளங்களை தூர்வாரினால் ஆட்சியை பிடிக்கலாமுன்னு யாரோ ஜோஸியர் சொல்லியிருக்காரு. அதான் ஸ்டாலின் மண்வெட்டியை தூக்கிட்டாரு.’ என்று இதற்கு துவக்கத்தில் அற்பத்தனமாக அ.தி.மு.க. விளக்கம் கொடுத்தது. ஆனால் தூர்வாரல் பணிக்காக தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை பார்த்துவிட்டு அரசாங்கமும் தூர்வாரலில் குதித்ததுதான் காமெடி! ஆக இந்த விஷயத்தில் முன்னோடி பட்டத்தை தட்டிக் கொண்டார் ஸ்டாலின்.

அதேபோல் நீட் விவகாரத்துக்காக போராட்டங்களை முடுக்கிவிடுவதிலும் எதிர்கட்சியான தி.மு.க. பல படிகள் கடந்து சென்ற பிறகுதான் மத்திய அரசிடம் வேண்டுகோள் படலத்தை துவக்கியது அ.தி.மு.க. 
இப்படி பொது விஷயங்களில் மட்டுமில்லை. தனி மனித விவகாரங்களிலும் எடப்பாடியை விட முன்னோடியாகவே ஸ்டாலின் நடந்து கொள்வதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 

குறிப்பாக...நீட் பூதத்தின் அகோர பசிக்கு இரையான அனிதாவின் குடும்பத்துக்கு அரசு வழங்கிய இழப்பீட்டு தொகை 7 லட்சம். ஆனால் ஸ்டாலின் வழங்கிய நிதியோ 10 லட்சம். இதிலும் ஸ்டாலின் எடப்பாடியை விட முந்தி நிற்கிறார் என்று காலர் தூக்குகிறது தி.மு.க. தரப்பு.

ஆனால் அ.தி.மு.க.வினரோ ‘எடப்பாடியார் வழங்கும் நிவாரண நிதி அவரது தனிப்பட்டது அல்ல. அரசின் வரையறைகளுக்கு உட்பட்டது. அதேவேளையில் அனிதா குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறாரே! இது பெரிய நிவாரணமில்லையா?” என்கிறார்கள்.

ஆனால் அதற்கும் மடக்கும் தி.மு.க.வினர் “அபலைகளுக்கு அரசு நிவாரணம் தரும் லட்சணத்தைத்தான் கண்கூடாக பார்க்கிறோமே! மாதா மாதம் ஓ.ஏ.பி. எனப்படும் வயதுமுதிர்ந்தோருக்கான உதவித்தொகையை கொடுப்பதற்காக சாப்பிட கூட அனுப்பாமல் ஏழை சீனியர் சிட்டிசன்களை வெயிலிலும், மழையிலும் காக்க வைத்துவிட்டு மறு நாள் வரச்சொல்லி அனுப்பி சாகாமல் சாகடிக்கும் கொடுமை தமிழ்நாடு முழுக்க நடக்கத்தான் செய்கிறது. இப்பேர்ப்பட்ட அரசாங்கம் அனிதாவின் சகோதர்களில் ஒருவருக்கு அரசு வேலையை எப்படி, எப்போது கொடுக்கிறது என்று பார்க்கத்தானே போகிறோம்.” என்கிறார்கள். 
எல்லாமே யோசிக்க வேண்டிய விஷயம்தான்!