தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 7.55 மணியளவில், காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். 

கோவில் வாசலில் இருந்து சிவப்பு கம்பளம் அத்திவரதர் சன்னதி வரை போடப்பட்டு இருந்தது. பச்சை வஸ்திரம், முந்திரி, திராட்சை, கற்கண்டு, பாதாம் பருப்பு போன்றவற்றை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் துளசி மாலை, மல்லிப்பூ மாலை போன்றவற்றையும் வைத்து கோவில் பட்டரிடம் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். அவை அனைத்தும் அத்திவரதருக்கு அணிவிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் அவர் கோவிலில் பணிபுரியும் 33 பட்டாக்ளுக்கும் வேட்டி மற்றும் அங்கவஸ்திரத்தை வழங்கினார். இலவச தரிசன பாதைகள், சுகாதார வசதிகள், குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். பக்தர்கள் எந்த வித சிரமமும் இன்றி அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கெட் வழங்குமாறும் அதிகாரிகளிடம் அவர் கூறினார்.


முன்னதாக காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் மக்களுக்கு வேண்டிய வசதிகள் குறித்து அவர்  ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்றும் பக்தர்கள் வசதிக்காக 1,250 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..


அவரது வருகையையொட்டி ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தது வேதனைகுறியது என்று 102 வயதான ஒருவர் தெரிவித்தார். மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி, போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்தது.