எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிட்ன் கூட்டணி என்ற பாஜகவின் முடிவு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக வெளிப்படையான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை என்றாலும், திரைமறைவு பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி திடீர் என கோடநாடு விவகாரத்தில் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறார், இந்த திடீர் தாக்குதல் அதிமுகவை விட பாஜகவைத்தான் அதிகம் பாதித்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் கூட்டணி கணக்கில் இதை வைத்து அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் பாஜக முயற்சி செய்து வருகிறது.

அதே நேரத்தில் கோடநாடு விவகாரத்தில் திமுக வாயை அடைக்கவும், எந்தச் சிக்கலும் இல்லாமல் இப்பிரச்சனையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியும் உள்ளார்.

பாஜக தமிழக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை சென்னை வரும்போது கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர்களிடம் பேச உள்ளார். இதையடுத்து மார்ச்  மாதத்தில் அதிமுக – பாஜக இடையே அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையும், சீட் ஷேரிங் குறித்தும் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி மீதான  குற்றச்சாட்டு கூட்டணியைப் பாதிக்கும் என சில பாஜக தலைவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இப்பிரச்சனை மக்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்றும் இதனால் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை மாற்றும் முயற்சிகளில் அவர்கள் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல் இந்த முறையும் செங்கோட்டையன் பெயரையே பாஜக தலைவர்கள் டிசைட் செய்துள்ளனர்.

இந்த பேச்சு குறித்து அறிந்த எடப்பாடி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என அவர் தரப்பு மறுத்துள்ள நிலையில்  ஒருவேளை அதிக அழுத்தம் வரும் நிலையில் அமைச்சர் தங்கமணியை பரிசீலிக்கலாம் என எடப்பாடி தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக நாடாளுமன்றத் தேர்லுக்கு முன்பு தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.