ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை இன்று காலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதேபோல் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

வழிகாட்டு குழுவில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பெண்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ஏற்கனவே எம்எல்ஏ, அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளவர்களே இந்த வழிகாட்டுக்குழுவில் உள்ளார்கள். அமைச்சர்கள் மட்டுமேதான் கட்சியா? நிர்வாகிகள் கட்சியில் தீவிரமாக பணியாற்றவில்லையா? இந்தக்குழு அமைத்துள்ளதை பார்த்தால் கட்சிக்கு முக்கியத்தும் கொடுக்கவில்லை, ஆட்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அவசர கோலத்தில் இந்த குழுவில் உறுப்பினர்களை தேர்வு செய்து போட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு அதிமுகவில் நிலவுகிறது.

இது ஒருபுறமிருக்க அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், ஆர் காமராஜும் கள்ளர் வகுப்பை சார்ந்தவர்கள். அமைச்சர்களான தங்கமணியும் , எஸ்.பி.வேலுமணியும் கவுண்டர் வகுப்பை சேர்ந்தவர். அமைச்சர் வி.வி.சண்முகம் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர், அமைச்சர் ஜெயக்குமார் மீனவர். ஆக எடப்பாடி பழனிசாமிபெரும்பான்மையான கவுண்டர்,  முக்குலத்தோர், வன்னியர் ஆகிய மூன்று பெரும்பான்மை சாதியினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வழி காட்டுதல் குழுவில் சேர்த்து இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர். 

அதேபோல் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த ஜே.சி.டி. பிரபாகர் கிறிஸ்தவ வன்னியர், மனோஜ் பாண்டியன், நாடார், சைவ பிள்ளை இனத்தை சேர்ந்த பா.மோகன், யாதவர் வகுப்பை சேர்ந்த கோபால கிருஷ்ணன், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சோழவந்தன் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோரை வழி காட்டுதல் குழுவில் இணைத்துள்ளார். அனைத்து சமுதாயத்தினரையும் தோழமை காட்டி அரவணைத்து செல்லும் விதமாக ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை வழிகாட்டுதல் குழுவில் இணைத்து இருப்பதாக கூறுகிறார்கள்.