கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "18 செ.மீ. அளவில் மழை பெய்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அரசு அறிவித்த ரூ. 4 லட்சத்தோடு கூடுதலாக ரூ.6 லட்சம் சேர்த்து வழங்கப்படும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும். அதேசமயம், வீடுகளை இழந்தோருக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும்.

சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார். இதில், சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், விபத்தில் இறந்து போனவர்களை வைத்து அரசியல் செய்கிறார் என குற்றம் சாட்டினார். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

அந்த சுவர்  தீண்டாமைச் சுவரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, விசாரணைக்குப் பிறகு அது தெரிய வரும் என எடப்பாடி பழனிசாமி  பதிலளித்தார்.