அரசியலுக்கு வருகிறார் எடப்பாடியின் மகன்! டார்கெட் பண்ணி வச்சிருப்பது எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?
கடந்த சில வருடங்களாகவே தேசிய அரசியலில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் தங்களது வாரிசுகளை அரசியல் களத்தில் இறக்கிவிட்டு அழகு பார்த்து வருகின்றனர் சில முக்கிய தலைவர்கள்.
திமுகவில், ஸ்டாலின் மகன் உதயநிதி அரசியல் மேடைகளில் அதகளம் செய்து வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாததால், விஜயகாந்த் மனைவி பிரேமலதா தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை களமிறக்கி தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதோடு, விஜய பிரபாகரனும் அப்பா கேப்டன் ஸ்டைலில் தெறிக்க விடுகிறார். ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் எம்.பியாக இருக்கிறார். அதே போல, திமுகவின் முக்கிய லீடரான டி.ஆர்.பாலு தனது மகனுக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்து ஜெயிக்க வைத்துள்ளார். பன்னீர் மகன்கள் ஏற்கனவே தங்கள் பங்கிற்கு தேனியில் தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார்கள்.
இப்படி அரசியல் புள்ளிகள் தங்களது வாரிசுகளை களமிறக்கியிருக்கும் நிலையில், தனக்கு துணையாக தன் மகன் மிதுன் குமாரை அரசியல் அரங்கில் அறிமுகப்படுத்த இருக்கிறாராம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி.
ஆமாம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும்போதுகூட திரும்பிப் பார்க்காத எடப்பாடியார், கெங்கவல்லி தொகுதியில் மாலை நான்கு மணி முதல் ஆறரை மணி வரை சுற்றி வந்திருக்கிறார்? அதிலும்… எடப்பாடி சென்றாலும் மொத்த அதிகாரிகளும் ஒட்டுமொத்த நலத்திட்ட உதவிகளையும் முடித்துவிட்டு வீரகனூரில் இருந்து புறப்படும்போது நள்ளிரவைத்த தாண்டியதாம். ஒரே நாளில் 27,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள். ஒருத்தர் கூட மிஸ் ஆகாமல் தேடி பிடித்து கொடுத்துட்டே வந்தார்களாம். எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்தாராம் எடப்பாடியார்.
எடப்பாடியின் இந்த அதிரடியான மூவ் அனைத்தையும் நோட்டமிடும் அமைச்சர்கள், வர இருக்கும் எம்.பி தேர்தலில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியின் மீது இப்போதே ஒரு கண் வைத்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. எடப்பாடி அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல கண் வெச்சிட்டாருங்கறது உண்மைதான். அதுவும் சேலம், கள்ளக்குறிச்சி இது ரெண்டையும்தான் முக்கியமா குறி வெச்சிருக்காராம் எடப்பாடியார். சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் நிற்பது என்னவோ காங்கிரசாகத்தான் இருக்கும். அடுத்து கள்ளக்குறிச்சியில திமுகதான் போட்டியிடும்னு நினைக்கிறாரு.
ஏற்கெனவே எடப்பாடி 98-ல எம்.பி.யா இருந்தப்போ தமிழ்நாட்ல அதிமுக ஆட்சியில இல்லை. தமிழ்நாட்ல ஆட்சியில இல்லாத நேரத்துல டெல்லி உறவு அவசியம்னு எடப்பாடிக்குத் தெரியும், அதனாலதான் வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல எப்படியாவது 10 முதல் 15 சீட்டாவது அதிமுக ஜெயிச்சே ஆகணும், நோக்கத்துல அவர் சேலம் இல்லேன்னா கள்ளக்குறிச்சிங்குற முடிவோட இருக்காரு. அதுவும் கள்ளக்குறிச்சியில தனக்கு நம்பிக்கையான ஒருத்தரை களமிறக்க முடிவு பண்ணிதான் அவரே இப்படி களமிறங்கியிருக்காரு. சில பேர் தனது நெடுநாள் விசுவாசியான உளுந்தூர்பேட்டை குமரகுருவின் பையனுக்குக் கள்ளக்குறிச்சியை எடப்பாடி தரப்போவதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், முதலமைச்சர் தானே களத்தில் குதித்திருப்பதைப் பார்த்தால், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தனது மகன் மிதுன் குமாரை நிக்க வைக்கலாம்னும் ஒரு திட்டமிட்டிருக்கார் எடப்பாடி பழனிசாமின்னு சொல்றாங்க. ஏன்னா ஆலோசனையின்போது, சிலர் நம்ம தம்பி கள்ளக்குறிச்சியில நிக்கவச்சா எப்படியிருக்கும் என கேட்டதற்கு பார்க்கலாம் என சொன்னாராம் எடப்பாடியார்.
எதிர்காலத்தில், தமிழகத்தில ஆட்சியில இல்லைன்னாலும் டெல்லியில தனக்கு நம்பிக்கையான சில பேர் இருந்தால்தான் பாதுகாப்புனு நினைக்கிறாராம். அது விசுவாசியாக இருப்பதைவிட தனது மகனாக இருந்தால் எந்த பயமும் இல்லை அதனால் இந்த முடிவாம்.