* இந்தியன் - 2 படத்தை லைக்கா நிறுவனத்திடம் இருந்து, ரிலையன்ஸுக்கு கைமாற்றிவிட இயக்குநர் ஷங்கருக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெரிய உதவி செய்து வருகிறார். இத்தனைக்கும் இதன் இசையமைப்பாளர் அனிருத்: செய்தி. (இசைப்புயல் தல, அப்படியே அந்த ஐந்தாறு பாட்டுகளுக்கும் நீங்களே புது நோட்ஸா கொடுத்து உதவுங்க அனி தம்பிக்கு. பயபுள்ள ‘பேட்ட’-க்காக பழைய ராஜா மெட்டுக்கள்ள பல வேட்டைகளை நடத்தி செருகியிருக்குது.)

* அதென்ன சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது? வேண்டுமானால் எங்கள் ஆட்சியின் மீதே கொண்டு வந்து பார்க்கட்டுமே ஸ்டாலின்.  எதுவானாலும் தோல்வி மட்டுமே அவரை சென்றடையும்: செம்மலை. (இந்தாளுக்கு பல நாளாவே எடப்பாடி ஆட்சி மேலே கண்ணு. அணிகள் இணைந்தப்ப எடப்பாடியாரை ‘அழுக்குத்தண்ணி’ன்னு கேவலப்படுத்தினார், அப்புறம் தேர்தல் பிரசாரத்துல நிர்வாகியை அடிச்சு கட்சிக்குள் பிரச்னையை கிளப்புனார், இப்ப சென்சிடீவ் டைம்ல ஸ்டாலினுக்கு ஐடியா கொடுக்குறார்.)

* நான் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவன். அம்மாதான் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்கள். ஆகவே அம்மாவின் ஆட்சின் இன்னும் நூறு ஆண்டுகள் தொடர ஆசைப்படுகிறேன். நான் அ.ம.மு.க.வின் ஆதரவாளன் இல்லை: விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன். (பாஸ், பதவி பறிபோகிற பயத்துல ஓவரா கூவாதீங்க. அஞ்சு வருஷம்தான் ஆட்சி செல்லும். அதுலேயும் மூணு வருஷம் ஓடிப்போயிடுச்சு. இன்னும் ரெண்டே ரெண்டுதான். அதுவும் இப்பவோ அப்பவோன்னு நிலைமை. அதனால அடக்கி வாசிங்கப்பு)

* குஜராத் விவசாயிகள் மீது பெப்சி போட்ட வழக்கை மிக மோசமான தாக்குதலாக கருதுகிறேன். பெப்சியின் விவசாய விரோத நடவடிக்கைக்கு எதிராக வழக்கு  தொடர யோசித்துள்ளோம்: அய்யாக்கண்ணு. (அதென்னமோ தெரியலை, நீங்க அமித்ஷாவை சந்திச்சுட்டு வந்த பிறகு என்ன பேசுனாலும் எங்களுக்கு காமெடியாவே இருக்குது. இவ்வளவு ஏன் ‘நெல்லு வயலில் விளையுது’ன்னு நீங்க சொன்னாலும் கூட ‘நான் பி.ஜே.பி.யிடம் சரண்டராயிட்டேன்’ன்னு சொல்றா மாதிரியே இருக்குது. ஏனுங்க அய்யாக்கண்ணுஜி?)

* தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் இருக்குமா இருக்காதா என்று சென்னையில் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுக்குள் பெரும் சூதாட்டம் நடப்பதாக தகவல்: செய்தி. (விடுங்க தல. கோட்டையில இப்படி ஓட்டை விழுறது என்ன புதுசா இல்லை அதிர்ச்சியா? பொதுவா எம்.எல்.ஏ.க்களை வெச்சு குதிரை பேரம், ஒவ்வொரு டெண்டருக்கும் அமைச்சர்கள் நடத்துற கொட்டேஷன் பேரம் அப்படின்னு அந்த ஏரியா முழுக்க எப்பவுமே பேர யூரியா வாசம் மணக்குறது வழக்கம்தானே?)