அடுத்த முறையும் ஆட்சியை கைப்பற்றி முதல்வர் நாற்காலியை பிடித்து விடவேண்டும் என ஐபேக் நிறுவன ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

 

பிரதமர் மோடிக்கு வெற்றியை அமைத்துக் கொடுத்தது இவரே. ஜெகன்மோகன் ரெட்டி, நிதிஷ் குமார் என பலரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க மூளையாக செயல்பட்டவர் இந்தத பிரசாந்த் கிஷோர். அவரை நம்பி போய் பார்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலில் மூன்றாவது முறையாக அதிமுகவை வெற்றி பெற வைக்கவும் இரண்டாவது முறையாக தான் முதல்வராகவும், மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவை தகர்க்கவும் எடப்பாடிபழனிசாமி, பிரசாந்த் கிஷோரை நம்பி இருப்பதாகவும் பேச்சுகள் பலமாய் அடிபட்டன. 

ஆனால், பிரஷாந்த் கிஷோர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் நெருக்கமான நட்பில் உள்ளார். ஓஎம்ஜி என்கிற நிறுவனம் திமுகவுக்கு பிரசார, விளம்பர வியூகங்களை வகுத்து கொடுக்கிறது. ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் கூட, இந்த நிறுவனம் தந்த திட்டம் தான். ஆகையால் பிரசாந்த் கிஷோரை நம்பலாமா? சபரீசனுடன் நட்பு வைத்துள்ள பிரசாந்த் கிஷோர் நம்ப வைத்து மோசம் செய்து விடுவாரா? என்கிற குழப்பத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

இதனால் பிரசாந்த் கிஷோரை நம்ப வேண்டாம் என துணை முதல்வர் ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதேபோல், எடப்பாடி நெருக்கமான தலைவர்கள் சிலரும் கூட எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இப்போது எடப்பாடி மனதில் இரண்டு ஐயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக தொடர்புள்ள பிரசாந்த் கிஷோரை நம்புவதா? இல்லை தான் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகக் கூடாது என்கிற காரணத்தால் ஓ.பி.எஸ் தடுக்கிறாரா? என இப்போது மேலும் குழப்பத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.