முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பிய நிலையில் அவரை வரவேற்க முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை கால் கடுக்க காத்திருந்தார்.

14 நாள் பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடு திரும்பியுள்ளார். சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் அவர் நாடு திரும்புவதால் அவரை வரவேற்க தமிழக அரசு மற்றும் அதிமுக சார்பில் தடல்புடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முதலமைச்சரை வரவேற்க நேரில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 

இப்படி முதலமைச்சரை வரவேற்க பலரும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அனைவர் கண்களிலும் அதிகம் பட்டது தம்பிதுரை தான். தற்போதைய சூழலில் அதிமுகவின் சீனியர்களில் மிக முக்கியமானவர் தம்பிதுரை தான். டெல்லியில் அதிமுகவின் அரசியல் விவகாரங்களை தம்பிதுரை கவனித்து வருகிறார். ஆனால் தங்கமணி – வேலுமணி களம் இறங்கிய பிறகு தம்பிதுரையின் முக்கியத்துவம் குறைந்தது.

 

மேலும் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, மாநிலங்களவை எம்பி தேர்தலில் வாய்ப்பு அளிக்காமை போன்ற காரணங்களில் கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் முதலமைச்சரை வரவேற்க முதல் ஆளாக தம்பிதுரை வந்திருந்தார். அதிலும் நீண்ட நேரம் அவர் நின்று கொண்டே இருந்தார். கையில் ஒரு சால்வையும் வைத்திருந்தார். 

முதலமைச்சர் வந்ததுமும் முதல் ஆளாக அந்த சால்வையை அணிவித்த பிறகு தான் தம்பிதுரை பெருமூச்சு விட்டார். அதாவது கால் கடுக்க காத்திருந்ததே இந்த சால்வையை முதல் ஆளாக அணிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இருந்தது தம்பிதுரையின் ரியாக்சன். கட்சியின் சீனியரான தம்பிதுரை அடுத்த மாநிலங்களவை எம்பி தேர்தலிலாவது மீண்டும் சீட் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது முதலே காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள்.