காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஊசலாட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளையும் அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துவிட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம், திருவாரூர், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.க்கள் மறைவு, ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வின் பதவி பறிப்பு போன்ற காரணங்களால் 21 தொகுதிகள் காலியாகிவிட்டன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 136 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி அரசுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைத் தொடர்ந்தார். 

அதிமுக வசம் இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி, கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதியும் காலியானது. இதனால், சட்டப்பேரவையின் பலம் 214 ஆகக் குறைந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் ஆட்சியைத் தொடரலாம். இதன் அடிப்படையில்தான் எடப்பாடி அரசு சிக்கல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், அதிமுகவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் இன்னும் இருக்கிறார்கள். இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏ.க்கள் ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள்.  இவர்களைக் கழித்துவிட்டு பார்த்தால் 110 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே அதிமுகவுக்கு இருக்கிறது. 

இதுபோன்ற சூழ்நிலையில்தான் ஓசூர் தொகுதியும் காலியானது. சட்டப்பேரவையில் காலியாக உள்ளத் தொகுதிகளின்  எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. இதனால் அதிமுகவின் பலம் 109 ஆக குறைந்திருக்கிறது. தற்போது நூலிழையில்தான் ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்கள். இதனால் சட்டப்பேரவையில் அதிமுக அரசு ஆட்டம் கண்டிருக்கிறது. 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தால், எடப்பாடி அரசுக்கு சிக்கல் வந்துவிடும். 

எஞ்சிய காலத்தை சிக்கல் இல்லாமல் கழிக்கவே ஆளும் அதிமுக கருதுகிறது. பிரபு, ரத்தினவேல் உள்பட 3 அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இரட்டை இலையில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரை சமாதானத்தப்படுத்தும் முயற்சியில் அதிமுக தரப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உறுதியாக இருந்தால், அதிமுக ஆதரவு 115 ஆக அதிகரித்துவிடும். இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளில் 3-ல் மட்டும் வெற்றி பெற்றால், ஆட்சியை சிக்கல் இல்லாமல் எஞ்சிய இரண்டு ஆண்டுகளையும் கழித்துவிடலாம்.

இதனை நன்கு உணர்ந்துள்ள அதிமுக, அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஊசலாட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஆளும் தரப்பு முயன்று வருவதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவும் அதிமுக தொண்டர்களின் ஆதரவும் யாருக்கு என்பது தெரிந்துவிடும் என்பதால், அதற்கேற்ப முடிவு எடுக்கவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் ஊசலாட்டத்தில் உள்ள 2 எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களை மட்டுமே நம்பிகொண்டிருக்காமல், இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெல்லும் வியூகத்தையும் அதிமுக தொடர்ந்து வகுத்து வருகிறது.