இந்தியாவில் இதுவரை எத்ததையோ இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே கொண்டு வருவதற்கான இடைத்தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மீண்டும் ஆட்சியை அதிமுக தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது கருணாநிதியின் கனவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? அல்லது ஆட்சி கவிழ்ந்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா என மக்களின் இதயங்களை எகிறவைக்கும் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றன. 

தமிழகத்தில் தற்போது மொத்தமுள்ள 234 தொகுதிகளின் நிலவரப்படி, அதிமுகவில் 114, திமுகவில் 97, சுயேட்சை 1 என மொத்தம் 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகள் காலியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் மே 23/ம் தேதி வெளியிடப்படுகிறது. 
 
இந்நிலையில் மீண்டும் அதிமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், திமுக ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் கைவசம் இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். அதிமுக கூட்டணியிலிருக்கும் 114 எம்.எல்.ஏ.க்களில் அதிமுக 111 + தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். திமுகவில், திமுக 88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 மொத்தம் 97 பேர் உள்ளனர். காலியாக 22 தொகுதிகள் உள்ளன. 

அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மொத்தம் 10 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது. ஏனென்றால் கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வருகின்றனர். அதேநேரம் அதிமுகவில் இருக்கும் கலைச்செல்வன் (விருதாச்சலம்), ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் டிடிவி.தினகரனை நேரடியாகவே ஆதரிக்கின்றனர். ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 108-ஆக குறைந்துவிடும். இதனால்தான் 10 தொகுதிகளில் வெற்றி தேவை. 

இந்நிலையில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, மொத்தம் 21 தொகுதிகளில் வென்றாக வேண்டும் (திமுக கூட்டணி 97 +21=118). அப்படி வெற்றிபெற்றால் அவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். இவற்றில் ஒன்றிரண்டு குறைந்தாலும் திமுக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். இந்த முடிவுகளை மாற்றும் சக்திகளாக இருப்பது அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இருந்து வருகின்றன. இந்த கட்சிகள் பல இடங்களில் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும் கட்சியாக இருந்து வருகின்றது. ஒருவேளை அமமுக ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனது ஆதரவு அதிமுகவுக்கும் கிடையாது, திமுகவுக்கும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இவற்றிற்கு எல்லாம் மே 23-ம் தேதியன்று முடிவு தெரியவரும்.