Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி அரசையே ஆட்டம் காண வைத்த பொன்.மாணிக்கவேல்! சி.பி.ஐ விசாரணையின் உண்மையான பின்னணி!

சிலை கடத்தல் வழக்கின் விசாரணை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசையே ஆட்டம் காண வைத்திருப்பதால் தான் உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

Edappadi Palanisamy regime pon.manickavel pressure

சிலை கடத்தல் வழக்கின் விசாரணை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசையே ஆட்டம் காண வைத்திருப்பதால் தான் உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது. பொதுவாக ஒரு மாநில அரசு எந்த ஒரு வழக்கையும் அவ்வளவு எளிதாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றாது. எதிர்கட்சிகள் கோரிக்கை வலுத்தாலும் கூட அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி மட்டுமே தமிழக அரசு உத்தரவிடும். ஏனென்றால் சி.பி.ஐ விசாரணைக்கு சென்றுவிட்டால் அந்த வழக்கின் போக்கு, முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் மாநில அரசுக்கு தெரியாது. சி.பி.ஐ அதிகாரிகள் நேரடியாக டெல்லிக்கு மட்டுமே ரிப்போர்ட் செய்வார்கள். 

உண்மை இவ்வாறாக இருக்க சிலை கடத்தல் வழக்குகளை யாரும் கேட்காமல் தன்னிச்சையாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க பெரும் போராட்டம் எல்லாம் நடத்தியது. ஆனால் மாநில காவல்துறை விசாரணையே போதுமானது என்று கூறி சி.பி.ஐ விசாரணைக்கு குட்கா வழக்கை மாற்ற தமிழக அரசு மறுத்து வந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் தலையிட்டு குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரைணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே சமயம் சிலை கடத்தல் வழக்குகளை ஒரே நாளில் சி.பி.ஐக்கு மாற்றி பரிந்துரைத்தது மட்டும் அல்லாமல், அரசாணைகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன. சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்ற தமிழக அரசு இந்த அளவிற்கு ஆர்வம் காட்டியதற்கான பின்னணியை விசாரித்த போது  தான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edappadi Palanisamy regime pon.manickavel pressure

 கடந்த ஒரு வருடமாக சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை விவரங்கள் அனைத்தையுமே பொன்.மாணிக்கவேல் மிக ரகசியமாக வைத்திருந்தார். யாரை விசாரிக்கப்போகிறோம், யாரை கைது செய்யப்போகிறோம் என்கிற தகவல் பொன்.மாணிக்கவேலை தவிர அவருக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு கூட தெரியாது. இதற்கு காரணம் சிலை கடத்தல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்புடைய ஊழல்களில் தி.மு.க மற்றம் அ.தி.மு.க மேலிடத்திற்கு மறைமுக தொடர்பு இருப்பது தான். அதிலும் பழனி மற்றும காஞ்சிபுரம் கோவில் சிலை முறைகேடு வழக்கு விசாரணையின் போது பொன்.மாணிக்கவேலுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளனர். அதாவது கோவில் சிலைகள் செய்து முறைகேடு மூலம் பெறப்பட்ட பணம் மற்றும் தங்கத்தில் பெரும் பகுதி ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களுக்கும் கைமாறியிருப்பது தான். இதற்கு எல்லாம் தரகர் வேலை பார்த்த அதிகாரிகளைத்தான் முதலில் பொன்.மாணிக்கவேல் குறி வைத்துள்ளார்.

 இப்படியாக பொன்.மாணிக்கவேலிடம் சிக்கியவர் தான் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா. தான் கைது செய்யப்படப்போகிறோம் என்கிற தகவல் முதலில் கவிதாவுக்கு தெரியாது. ஆனால் கவிதாவை பொன்.மாணிக்கவேல் கண்காணிக்கிறார் என்கிற தகவல் உளவுத்துறை மூலமாக மேலிடத்திற்கு சென்றுள்ளது. உடனடியாக இந்த தகவல் மூத்த அமைச்சர் ஒருவர் மூலமாக கவிதாவிடம் சொல்லப்பட்டுள்ளது.  ஆனால் இதனை எல்லாம் கேட்டு கவிதா சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் அவர் அ.தி.மு.க ஆட்சியில் மட்டும் அல்ல தி.மு.க ஆட்சியிலும் சக்தி வாய்ந்த ஒரு அதிகாரியாக திகழ்ந்துள்ளார். தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது சென்னை ரீஜினலில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு பிற மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் கவிதா இடமாற்றத்தை மட்டும் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி நேரடியாக தலையிட்டு நிறுத்தி வைத்ததாக ஒரு தகவல் உலவுகிறது.

Edappadi Palanisamy regime pon.manickavel pressure

   தி.மு.க ஆட்சியிலேயே இந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவராக இருந்த கவிதாவுக்கு அ.தி.மு.க ஆட்சியிலும் மூத்த அமைச்சர்கள் மற்றும் அவர்களை விட அதிக அதிகாரம் கொண்ட நபர்களுடன் நேரடி தொடர்பு இருந்துள்ளது. இதனால் தான் பொன்.மாணிக்கவேல் தன்னை கைது செய்யமாட்டார், ஆனால் விசாரணைக்கு அழைப்பார் என்று கவிதா எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு பொய்யாகி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உடன் பொன்.மாணிக்கவேலிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைத்துள்ளார் கவிதா. 

அதாவது தான் தனது வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை. பொன்.மாணிக்கவேலும் அதற்கு உடனடியாக அனுமதி கொடுத்துள்ளார். தனது செல்போன் மூலம் வழக்கறிஞரை தொடர்பு கொள்ள கவிதா முயல, அதற்கு அனுமதி மறுத்த பொன்.மாணிக்கவேல் அலுவலக தொலைபேசியில் இருந்து பேசுங்கள் என்று கூறியுள்ளார். உடனடியாக தனது வழக்கறிஞரை தொடர்பு கொண்ட கவிதா, பொன்.மாணிக்கவேல் அருகில் இருப்பதையும் பொருட்படுத்தாமல், தன்னை கைவிட்டுவிட்டால் அனைவரையும் காட்டிக் கொடுப்பேன் என்று மட்டும் அவரிடம் கூறிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துள்ளார். 

அந்த அவர் யார் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அந்த அவர், நிச்சயமாக ஒரு அமைச்சர் என்கின்றனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார். ஏனென்றால் கவிதாவை விட்டுவிடும் படி அந்த அமைச்சர் நேரடியாக பொன்.மாணிக்கவேலிடம் பேசியுள்ளார். ஆனால் பொன்.மாணிக்கவேல் கவிதாவின் கைதில் தான் சிலை கடத்தல் மற்றும் முறைகேடு வழக்கின் அடுத்தகட்டமே இருப்பதாக கூறி அமைச்சரை ஆஃப் செய்துள்ளார். இதனால் தான் இனியும் பொன்.மாணிக்கவேலை விடக்கூடாது என்று தமிழக அரசு வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியுள்ளது.

அதாவது கவிதா வாய் திறந்தால் தி.மு.க ஆட்சிக்காலத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் மட்டும் அல்ல, தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க தொடர்புடைய முக்கிய பிரபலங்கள் பலரும் சிக்குவார்கள் என்கிறது கோட்டை வட்டாரம். அதிலும் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி வாய் திறந்தால் நிச்சயம், பல அதிகாரம் மிக்க நபர்களின் பெயர் வெளிவரும். கோவில் சிலை விவகாரத்தில் அவர்களின் பெயர்கள் வெளியே வந்தால் சமாளிப்பது மிகவும் கஷ்டம்.  ஏற்கனவே குட்கா ஊழல், வருமான வரித்துறை சோதனை, டென்டர் முறைகேடு என்று மத்திய அரசு தமிழக அரசை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் சிலை கடத்தல் முறைகேட்டில் அதிகாரமிக்கவர்களுக்கு தொடர்பு என்கிற தகவல் வெளியே கசிந்தால், ஆட்சிக்கே ஆபத்து என்பதால் தான் பொன்.மாணிக்கவேலை ஆஃப் செய்ய சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios