அண்மையில் அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தை குழு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதிலும் மிக முக்கியமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 2 பேருக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டிருந்தது.

ஐந்து பேர் கொண்ட குழுவில் எடப்பாடியின் இடது மற்றும் வலது கரமான தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் இடம்பெற்றுள்ளனர். மேலும் தஞ்சை வைத்திலிங்கத்திற்கும் அந்த குழுவில் இடம் இருக்கிறது. ஆனால் ஓ.பி.எஸ் தரப்பில் கே.பி.முனுசாமி மற்றும் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோருக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டிருந்தது. 

இதே போல் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ஓ.பி.எஸ் அணியில் இருந்த செம்மலை, நத்தம் விஸ்வநாதன் தவிர வேறு ஒருவருக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை. தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படுத்தும் குழுவிலோ ஓ.பி.எஸ் அணியில் இருந்த ஒருவரும் இல்லை. இப்படி முக்கியமான விஷயங்களில் கூட ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை பெற்றத்தருவது இல்லை என்கிற பேச்சு எழுந்துள்ளது.

அதிலும் ஓ.பி.எஸ் அணியில் இருந்த சிவகங்கை கண்ணப்பன், சங்கராபுரம் மோகன் ஆகியோருக்கு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. அதிலும் ஓ.பி.எஸ் தனி அணியாக செயல்பட்டு வந்த போது கண்ணப்பன் அதிகம் செலவு செய்த நபர்களில் ஒருவர் என்றும் பேசப்படுகிறது. இதே போல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் ஓ.பி.எஸ் அணிக்கு வந்த ஒரு சிலர் இழந்த அந்த பதவியை தற்போது வரை பெறாமல் உள்ளனர்.

இப்படி நம்பி வந்த ஆதரவாளர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமலும், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியின் அதிகாரத்தை தனது ஆதரவாளர்களுக்காக பயன்படுத்தாமலும் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். இப்படியே போனால் அ.தி.மு.கவில் இருக்கும் அனைவரும் எடப்பாடியின் ஆதரவாளர்களாகிவிடுவார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.