Asianet News Tamil

அசந்தா நீங்க அடிப்பீங்க..! நாங்க அசராம அடிப்போம்..! எடப்பாடியாரின் நியுஸ்பேப்பர் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

தேர்தல் பிரச்சாரத்திற்கு கடைசி நாளான நேற்று அனைத்து முன்னணி செய்தித் தாள்களின் முதல் பக்கத்திலும் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின் அவலங்களை செய்தியாக வெளியிட வைத்து திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palanisamy Newspaper Master Stroke
Author
Tamil Nadu, First Published Apr 5, 2021, 11:46 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தேர்தல் பிரச்சாரத்திற்கு கடைசி நாளான நேற்று அனைத்து முன்னணி செய்தித் தாள்களின் முதல் பக்கத்திலும் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின் அவலங்களை செய்தியாக வெளியிட வைத்து திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தை பொறுத்தவரை தினந்தோறும் செய்தித்தாள் படிப்பவர்களில் 90 சதவீதம் பேர் தேர்தல்களில் தவறாமல் வாக்களிப்பார்கள் என்கிறது ஒரு சர்வே. இதனை அடிப்படையாக வைத்தே தனது பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தியுள்ளது அதிமுக. பொதுவாக தமிழக ஊடகங்களில் சாதாரண ஊழியர்கள் முதல் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வரை திமுக அனுதாபிகளாக இருப்பார்கள். செய்தித்தாள் தொடங்கி தொலைக்காட்சிகள் கடந்து தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும் டிஜிட்டல் ஊடகங்கள் வரை பெரும்பாலானவை திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவது கண்கூடாக தெரியும் உண்மை.

முன்னணி தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர்கள் முதல் டிஜிட்டல் ஊடகங்களை நடத்துபவர்கள் வரை திமுக மறுபடியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பொது வெளியில் பேசவோ அல்லது சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடவோ தயங்கியதே இல்லை. இதனால் தான் தமிழகத்தில் பாஜக போன்ற கட்சிகளால் காலூன்ற முடியாத நிலை உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்த செயல் ஒட்டு மொத்த திமுக ஆதரவு ஊடகவாதிகளையும் கொதிக்க வைத்துள்ளது. சிலர் காலில் வெந்நீர் ஊற்றியது போல் தாம் தூம் என்று குதிப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இதற்கு காரணம் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின் அவலங்களை அப்படியே செய்தியாக முன்னணி செய்தித்தாள்கள் அனைத்திலும் முதல் பக்கத்தில் விளம்பரமாக அதிமுக கொடுத்தது தான். பாரம்பரியம் வாய்ந்த த இந்து, தினந்தந்தி தொடங்கி தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் என அனைத்து செய்தித் தாள்களும் சுமார் நான்கு பக்கங்களுக்கு திமுக ஆட்சியின் அவலங்களை செய்தியாக தோற்றம் அளிக்கும்விளம்பரமாக வெளியிட்டுள்ளன. ஆனால இப்படி ஒரு விளம்பரம் வரப்போகிறது என்பது அந்தந்த செய்தித்தாள்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் கீழ் நிலை ஊழியர்கள் வரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு காரணம் அந்த செய்தித்தாள் நிறுவனங்களில் பணியாற்றும் திமுக அனுதாபிகள் தான். ஒருவேளை அவர்கள் மூலம் விஷயம் லீக் ஆனால் திமுக தரப்பு கொடுக்கும் நெருக்கடியால் அந்த விளம்பரங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் மிகவும் சாமர்த்தியமாக செய்தித்தாள் நிறுவனங்களின் உரிமையாளர்களை மட்டும் அணுகி கனக்கச்சிதமாக நள்ளிரவு நேரத்தில் இதனை அச்சில் ஏற்றி அதிகாலையில் வெளியிட வைத்துள்ளது அதிமுக. காலையில் இந்த விளம்பரங்களை பார்த்த திமுகவினருக்கு பயங்கர அதிர்ச்சி. முதலில் அந்த செய்தித்தாள்களை பார்க்கும் போது அது என்ன என்றே அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பிறக தான் அது என்ன என்று தெரிந்து புலம்ப ஆரம்பித்துள்ளனர் திமுக. பொதுவாக தமிழகத்தில் தேர்தல் சமயங்களில் இது போன்ற ரிஸ்க் விளம்பரங்களை தினத்தந்தி போன்ற செய்தித்தாள்கள் வெளியிடாது. அதுவும் அடுத்து திமுக தான் ஆட்சிக்கு வர உள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் திமுகவை டோட்டலாக டேமேஜ் செய்யும் விளம்பரத்தை தினத்தந்தி வெளியிட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அப்படி என்றால் திமுக மறுபடியும் ஆட்சிக்கு வராது என்று தினத்தந்தி போன்ற நிறுவனங்கள் கருதியிருக்கலாம் என்று கூ ட கூறுகிறார்கள்.

ஆனால் ஒட்டு மொத்த ஊடகங்களும் நம் கையில் என்று இருந்த திமுக தரப்பிற்கு ஒரே நாளில் ஒரே ஒரு விளம்பரம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios