முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் செல்லூர் ராஜூ கூறிய கருத்து எடப்பாடி பழனிசாமி தரப்பை மிகவும் கோபம் அடைய வைத்ததாகவும் அதன் வெளிப்பாடாகவே ராஜேந்திர பாலாஜியின் ட்வீட் தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு இடமே இல்லை. அதே போல் ஜெயலலிதா இருந்த வரை கட்சியில் அவருக்கு அடுத்து யார் என்கிற கேள்விக்கும் விடை கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது வாரிசாக தன்னை முன்னிலைப்படுத்த சசிகலா பகீரத முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதனை ஓபிஎஸ் முறியடித்தார். பிறகு ஓபிஎஸ் தன்னை ஜெயலலிதாவின் வாரிசாக முன்னிலைப்படுத்த முயன்று தோல்வி அடைந்தார். இதே போல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அதிமுகவில் செல்வாக்கு செலுத்த முயன்று வெற்றி பெற முடியாமல் போனது.

ஆனால் ஜெயலலிதாவின் வாரிசு என்கிற விஷயத்திற்குள்ளாகவே வராமல் அதிமுகவை தற்போது எடப்பாடி பழனிசாமி கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றால் அதனை மறுக்க முடியாது. காரணம் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் என அனைத்திலும் அவரது ஆதிக்கமே இருந்தது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும் கூட கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள் எடப்பாடி பழனிசாமியின் விருப்பம் சார்ந்ததாக இருந்தது. ஓபிஎஸ்சால் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தான் இருக்கிறது.

ஆனால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இது தான் கட்சியில் தற்போது சலசலப்புக்கு காரணம் என்கிறார்கள். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் வரை கட்சியில் மிகவும் அதிகாரம் பொருந்திய நபராக எடப்பாடியார் பார்க்கப்பட்டார். ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் ஓபிஎஸ்சின் ஆதிக்கம் இருந்தது. இதன் மூலம் கட்சி தொடர்பான சில முடிவுகளில் ஓபிஎஸ்சை ஓரம்கட்டுவதை ஈபிஎஸ் விரும்பவில்லை என்கிறார்கள்.

மேலும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தனக்காக பிரத்யேக வியூக வகுப்பாளருடன் எடப்பாடி பழனிசாமி களம் இறங்கியுள்ளார். இதனை ஓபிஎஸ் மட்டும் அல்ல அமைச்சர்கள் சிலரே விரும்பவில்லை என்கிறார்கள். திமுக ஒட்டு மொத்தமாக கட்சிக்கு என்று வியூக வகுப்பாளரை அமர்த்தியுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு என்று வியூக வகுப்பாளரை அணுகாமல் தன்னை முன்னிலைப்படுத்த சுனில் எனும் வியூக வகுப்பாளருடன் ஒப்பந்தம் செய்திருப்பது கட்சியில் பல்வேறு கேள்விகளை எழுப்பின.அப்படி என்றால் அடுத்த முறையும் தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற எண்ணத்துடன் தேர்தலை எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள உள்ளாரா? என்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம் தான் கூடி முடிவெடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விரும்புவதாக சொல்கிறார்கள். கட்சியில் இப்படி ஒரு பூசல் இருப்பதை உணர்ந்தே இந்த விவகாரத்தில் தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று யாருக்கும் சாதமாக இல்லாமல் ஒரு கருத்தை செல்லூர் ராஜூ முன் வைத்துள்ளார். ஆனால் இது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிருப்தி அடைய வைத்ததால் தான் அவரது ஆதரவாளரான ராஜேந்திர பாலாஜி அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் தற்போது வரை எந்த தெளிவான முடிவும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அவ்வளவு எளிதாக ஓபிஎஸ் தரப்பை எதிர்கொள்ள முடியாது என்றும் கூறப்படுகிறது. எடப்பாடியுடன் தற்போது நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டாலும் கூட ஓபிஎஸ் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் தென் மாவட்ட அதிமுக நிர்வாகிககள் இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.