தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்போரே கூட்டணியிலிருக்க முடியும் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, ஒருவழியாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்க வேண்டிய விஷயம். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது என பொன்.தாராகிருஷ்ணன் கூறியிருந்தார்.

அதேபோல், வானதி சீனிவாசன் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதேவேளையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? என்பதை  எங்களின் தேசிய தலைமை தான் சொல்ல வேண்டும் என்றார். அடுத்தடுத்து பாஜக தலைவர் இதுபோல கருத்துக்களை தெரிவித்து வருவது அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜக கருத்து அதிமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், பாஜகவை ஒரே வார்த்தையால் கே.பி.முனுசாமி வாயடைக்க செய்துள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி;- தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், எங்களால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும். ஏற்றுகொள்ளாதவர்கள் நிச்சயம் எங்கள் கூட்டணியில் இருக்க முடியாது என கூறியுள்ளார்.