மக்களின் வரவேற்பை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார் என தலைமை உத்தரவை மீறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என அமைச்சர்கள் இடையே அண்மையில் மாறுபட்ட கருத்து எழுந்தது. சுகந்திர தினத்தன்று இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் மாறி மாறி ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அதிமுகவினர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். 

முன்னதாக தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு என துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்திருந்தார். இந்த நடவடிக்கைகளால் முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என அமைச்சர் கருப்பண்ணன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மக்களின் வரவேற்பை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை முதல்வர் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்ட நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளது அதிமுகவில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.