சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்துள்ளது. ஆனால், கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப்படவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் எல். முருகன் இன்று மாலை  சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன.


சந்திப்புக்குப் பிறகு எல்,முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கறுப்பர் கூட்ட விவகாரத்தில் ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்த வேண்டும். கறுப்பர் கூட்ட பின்னணியில் யார் இருக்கிறார்களோ, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். மேலும் வேளாண் சட்ட மசோதாவிற்கு முதல்வர் ஆதரவாகப் பேசினார். அதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்தேன்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.
பின்னர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக முதல்வர் வேட்பாளரா? அல்லது அதிமுக கூட்டணி வேட்பாளரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு பாஜக தலைவர் எல்.முருகன் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.