சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் உடல் நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று விசாரித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனே ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இதனையடுத்து, நேற்று இரவுவே அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று மாலையே வீடு திரும்புவார் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றிருந்தார்.