edappadi palanisamy inaugurates flyover project in erode

ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக அரசு மருத்துவமனை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அதிமுக அரசால் திட்டமிடப்பட்டு அதற்காக 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 

 ஈரோட்டில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசு மருத்துவமனை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2015 ஆண்டு தொடங்கப்பட்டது. 

இதற்காக அங்குள்ள எம்ஜிஆர், காமராஜர், ஈவிகேசம்பத் ஆகிய தலைவர்களின் சிலைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எம்ஜிஆர் சிலையை அகற்ற அதிமுகவினர் முன்வராததால் மற்ற தலைவர்களின் சிலைகளும் அகற்றப்படாமல் இருந்தன. சிலைகளை அகற்றாமல் ரவுண்டான அமைக்க முடியாது என்பதால் ரவுண்டானா பணிகள் 60 சதவீத நிறைவோடு கிடப்பில் போடப்பட்டது. 

இதையடுத்து மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை, நசியனூர் சாலை, ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலத் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியதை அடுத்து 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலைகளை அகற்றாமல் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. 

இதற்கிடையே இன்று காலை ஈரோடு சென்ற முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உயர்மட்ட மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் எதிரியும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொள்ளவில்லை.