அக்டோபர் 7ந் தேதி முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வரும் நிலையில் தனது ஆதரவாளர்களை சென்னைக்கு புறப்பட்டு வருமாறு அவரது தரப்பில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் சென்ற வண்ணம் உள்ளன.

செப்டம்பர் 28 செயற்குழு கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. செயற்குழுவில் ஓபிஎஸ்சுக்கு துளியும் ஆதரவு இல்லை என்பது தெரிந்த பிறகு பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி முழுமையாக புரிந்து வைத்துள்ளார். இதனால் ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 7ந் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து காய் நகர்த்தி வருகிறார். இதற்கு முட்டுக்கட்டை போட ஓபிஎஸ் தரப்பும் வியூகம் வகுத்து வருகிறது. அமைச்சர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர்.

இதனால் ஓபிஎஸ் தரப்பு அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளது. அதே சமயம் எடப்பாடி தரப்பு மிகச்சிறப்பாக ஸ்கெட்ச் போட்டு முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு தயாராகி வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சம்மதம் இல்லாமல் எப்படி முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க இயலும் என்று ஒரு சில சீனியர்கள் மட்டுமே எடப்பாடிக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்தே எடப்பாடி தனது ஆதரவாளர்களை ஓபிஎஸ்சை சந்திக்க அனுப்பி வருகிறார். அங்கு செல்லும் எடப்பாடி ஆதரவாளர்கள் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்திற்கு முதலில் தீர்வு காணலாம் என்று ஓபிஎஸ்சிடம் பேசி வருகிறார்கள்.

ஆனால் ஓபிஎஸ் எதற்கும் பிடிகொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். 11 பேர் கொண்ட கட்சியின் வழிகாட்டுதல் குழுவை அமைத்து அதன் பிறகு முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்று ஓபிஎஸ் தொடர்ந்து சொல்லி வருகிறார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு இருவரும் இணைந்து உறுப்பினர்களை தேர்வு செய்யலாம் என்றும் ஓபிஎஸ் கூறுவதாக சொல்கிறார்கள். ஆனால் வழிகாட்டுதல் குழு என்கிற கான்செப்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்றுவது. அது அதிமுகவிற்கு சரிப்பட்டு வராது என்று எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

இதனால் எடப்பாடியை முதலமைச்சராக ஏற்பது குறித்து எந்த உறுதியும் ஓபிஎஸ் தர மறுக்கிறார்கள். கட்சியின் சீனியரான தம்பிதுரை நேரில் சென்று சந்தித்து பேசிய போதும் கூட வழிகாட்டுதல் குழு அவசியம் என்றே ஓபிஎஸ் கூறியுள்ளார். அப்போது, இப்படி நாம் நமக்குள் பிரச்சனை செய்தால் அது திமுகவிற்கு தான் சாதகமாகும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதற்கு எடப்பாடியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் கூட அது திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும் என்று ஓபிஎஸ் நக்கலாக கூறியதாக சொல்கிறார்கள். இப்படி முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ்சும், வழிகாட்டுதல் குழு விவகாரத்தில் இபிஎஸ்சும் பிடிவாதம் காட்டுவதால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அதே சமயம் ஓபிஎஸ் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 7ந் தேதி முதலமைச்சராக தன்னை அறிவித்துக் கொள்வதில் எடப்பாடி உறுதியாக உள்ளார் என்கிறார்கள். ஓபிஎஸ் வரவில்லை என்றாலும் கட்சியின் சீனியர்கள், அமைச்சர்களில் சீனியர்களை வைத்து முதலமைச்சர் வேட்பாளராக தனக்கு முடி சூட்ட ஏற்பாடுகளை எடப்பாடி முடுக்கிவிட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதற்காகவே தனது ஆதரவு எம்எல்ஏக்களை சென்னை வருமாறு எடப்பாடி அழைத்துள்ளதாக சொல்கிறார்கள். இதே போல் மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களுக்கும் அவர் சென்னை வர அழைப்பு விடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க இருக்கும் அக்டோபர் ஏழுக்கு முன்னதாக அனைவரையும் சந்தித்து அவர்கள் விரும்பும் விஷயங்களை செய்து கொடுக்க எடப்பாடி ஆயத்தமாகியிருப்பதாக கூறுகிறார்கள். இதற்கிடையே துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவசரமாக தேனி புறப்பட்டுச் சென்றார். இதற்கு காரணம் தொடர்ந்து எடப்பாடி தரப்பில் இருந்து வந்து அவரை சந்தித்து சமாதானம் செய்ய முயல்வது தான் என்கிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக சென்று ஓபிஎஸ்சை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் அதனை விரும்பாமல் தான் ஓபிஎஸ் தேனி புறப்பட்டு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.