சத்தியம் செய்து சொல்லலாம்...’முதல்வர் பதவியில் அமர்ந்த நொடியில் இருந்து நிச்சயமாக நிம்மதியாக தூங்கியிருக்கவே மாட்டார் எடப்பாடியார்!’ என்று. அதிலும் கடந்த பத்து நாட்களாக நிகழ்ந்து வரும் விஷயங்கள் முதல்வரை நாலு உருண்டை சோற்றை கூட நிம்மதியாக விழுங்க விடுவதில்லை என்பதே உண்மை. 

‘டெல்லி லாபி, முதல்வருக்கு கூட்டணி அழுத்தம் கொடுத்து மிரள வைக்கிறது!’என்கிறார்கள் அ.தி.மு.க.வின் தலைமை ரகசியங்களை தெளிவாய் அறிந்தவர்கள். சுத்தமாக முதல்வருக்கு நிம்மதியான நாட்களே இல்லை என்று பெரும் வருத்தம் கொள்கிறார்கள். 

என்னதான் அழுத்தம் கொடுக்கிறது டெல்லி லாபி?... “நாடாளுமன்ற தேர்தல் காட்டாற்றில் அவர்களை எங்களின் தோளின் மீதல்ல தலையின் மேல் உட்கார வைத்து  இறங்கச் சொல்கிறார்கள். முதல்வர் உளவுத்துறை மற்றும் அந்தத பகுதி மந்திரிகளின் உதவியுடன் தொண்டர்களின் மன நிலை பற்றி ஒரு கேஸுவல் சர்வே நடத்திப் பார்த்தார். ‘பி.ஜே.பி.யுடன் கூட்டணி கூடவே கூடாது!’ என்று ரிசல்ட் வந்திருக்கிறது. 

ஆனால் அதையும் தாண்டி, டெல்லியின் அழுத்தத்துக்காக கூட்டணிக்கு முதல்வர் தயார் ஆனார்தான். ஆனால் அவர்கள் போடும் கண்டிஷன் மிக மோசமானதாக  இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதில் பாதி தொகுதிகளைக் கேட்கிறார்கள். அது போதாதென்று, நாங்கள் ஜெயிக்கும் வாய்ப்பு அமோகமாக இருக்கும் தொகுதிகளை குறிவைத்துக் கேட்கிறார்கள். இதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? டெல்லி சொல்லும் லிஸ்டை அப்படியே ஏற்று முதல்வர் அறிவித்தால், கட்சிக்குள் உள் கலகம் உருவாகி பிளவுகள் உருவானாலும் ஆச்சரியமில்லை. 

முக்கிய தலைகள் சிலர் சுயேட்சையாக நின்றாலும் வியப்பில்லை! இதை அப்படியே டெல்லி தூதுவர்களிடம் சொல்லிவிட்டார் எடப்பாடி. ஆனால் எதையும் காதில் ஏற்றிக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. பிடித்த பிடியிலேயே குறியாக இருக்கிறார்கள். முதல்வர் அதையும் மீறி முரண்டு காட்டிய சில மணி நேரங்களில் ‘கொடநாடு கொலை, கொள்ளைகளில் தமிழக முதல்வரின் பங்கு’ என்று வந்து இறங்குகிறது இடி. என்ன செய்வது? கட்சியை கவனிப்பாரா? ஆட்சியை நடத்துவாரா? இல்லை தன் மீது விழும் தனிமனித தாக்குதல்களை தடுத்துச் சமாளிப்பாரா? ச்சுத்தமாக நிம்மதியில்லை முதல்வருக்கு. 

கொங்கு மண்டல அமைச்சர்கள்தான அவருக்கு பக்க பலமாக இருந்து தேற்றி வருகிறார்கள். இம்மாத இறுதியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் கிளம்பும் முன், அவர்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய முடிவை சொல்லியே தீரவேண்டும்! என்பது போல் டெல்லி லாபி உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் எடப்பாடியாரின் பதவியையே அசைத்துப் பார்க்க யோசிக்க மாட்டார்கள் போல!” என்று நிறுத்துகிறார்கள். நிலவரம் சரியில்லை என்பதே ஒட்டுமொத்த காட்சிகளும் உணர்த்தும் உண்மை!