அட பொசுக்குன்னு! ஓபிஎஸ்-ஐ பார்த்து இபிஎஸ் இப்படி சொல்லிட்டாரே! ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டத்தில் ஆவேச பேச்சு..!
ஓபிஎஸ்வுடன் போய் சேர்ந்தால் தூக்கில் தொங்குவதற்கு சமம் என்றார் டிடிவி.தினகரன். இன்றைக்கு கயிறு கிடைக்கவில்லை போல என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரு அதிமுக தொண்டன் கூட ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்கமாட்டான் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய இபிஎஸ்;- ஓபிஎஸ் நடத்திய திருச்சி பொதுக்கூட்டத்தில் வைத்தியலிங்கம் கடைசி வரை என்னைதான் திட்டினார்கள். என்னை திட்டி என்னதான் செய்யப்போகிறார்கள். சாதாரண தொண்டன் நான். நான் பொதுச்செயலாளர் இல்லை. இங்கு வந்திருக்கக்கூடிய அனைவரும் பொதுச்செயலாளர் தான்.
ஓராயிரம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மட்டுமல்ல துரோக செயல்களில் ஈடுபடுகிற யாராக இருந்தாலும் ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ். ஒரு அதிமுக தொண்டன் கூட ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்கமாட்டான். டிடிவி.தினகரன் துரோகி என்ற ஓபிஎஸ் தற்போது ஒன்றாக சேர்ந்துள்ளார். 10 ஆண்டு காலம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரனோடு கைகோர்த்து துரோகம் இழைத்தவர் ஓபிஎஸ். முதலில் ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று ஒரு யுத்தத்தை தொடங்கினார். மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். அவருக்கு பெரிய இலாகாவை கொடுத்து மரியாதை கொடுத்தோம். ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தந்த கட்சிக்கு துரோகம் இழைத்தவர். துரோகிகள் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம் என்றார்.
ஓபிஎஸூம் நானும் ஒன்றாக இருக்கும் போது எங்கள் இருவரையும் துரோகி என்றார் டிடிவி.தினகரன். இன்று நண்பராகிவிட்டார். ஓபிஎஸ்வுடன் போய் சேர்ந்தால் தூக்கில் தொங்குவதற்கு சமம் என்றார் டிடிவி.தினகரன். இன்றைக்கு கயிறு கிடைக்கவில்லை போல என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து. அதிலிருந்து ஒரு செங்கல்லை கூட யாராலும் அசைக்க முடியாது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக ஊழல் செய்த ரூ.30,000 கோடி கண்டுபிடிக்கப்படும். திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு பி டீமாக செயல்படுகிறார். கஞ்சா ஒழிப்பு 2.0, 3.0 என ஓ போடும் முதல்வராக மட்டுமே ஸ்டாலின் இருந்து வருகிறார். கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்தே இருக்கின்றன. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றிய விடியா அரசு என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.