அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என எடப்பாடி பழனிசாமி- வேலுமணியை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

 

சென்னையில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலையெங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ‘’வீடு - சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சித் துறையை ஊழலாட்சித் துறை ஆக்கிவிட்ட வேலுமணியும், அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள் பாடம் கற்கவில்லை. மாறாக இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். வெள்ளத்தடுப்பு பணிக்கான நிதியை வேலுமணியின் ஏழு கம்பெனி பினாமிகள் - மாநகராட்சி ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே இந்த அவலத்துக்கு காரணம். மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே’’எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேவேளை, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் அமெரிக்கை நாராயணன், உள்ளாட்சித் துறைக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார். அதில், ‘’நன்றி. ஒரு சில மணி நேரங்களில் மழைநீர் கால்வாய் அடைப்புக்களை நீக்கி தண்ணீர் தேங்குவதை எடுத்ததற்கு.
குறைகளைச் சொல்லும் நான் நிறைகளை எடுத்துக் காட்ட தயங்குவதில்லை’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.