Asianet News TamilAsianet News Tamil

பன்னீர் அணிக்கு எதிராக தொடங்கியது பேனர் யுத்தம்: ஜெயலலிதா பாணியில் வலம் வரும் எடப்பாடி!

edappadi palanisamy banner war against ops
edappadi palanisamy-banner-war-against-ops
Author
First Published May 4, 2017, 9:14 AM IST


எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே, எந்தவித பந்தாவும் இல்லாமல் ஒரு எளிமையான முதல்வராகவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

அவரது சொந்த தொகுதியான எடப்பாடியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட போது கூட, எந்தவிதமான ப்ளெக்ஸ் விளம்பரங்களும் வைக்கக்கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

ஆனால், நேற்று, சென்னையில்  மாற்று திறனாளிகளுக்கான கட்டிடத்தை அவர் திறந்து வைக்க சென்றபோது, வழி நெடுக, ஜெயலலிதா பாணியில் எடப்பாடியின் பேனர்கள் கண் சிமிட்ட ஆரம்பித்தன.

edappadi palanisamy-banner-war-against-ops

எடப்பாடியின் அணுகுமுறையில் இந்த திடீர் மாற்றத்திற்கு, பன்னீர் அணியின் விளம்பர உத்தியே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

மே தின விழா பொது கூட்டங்களை ஒட்டி சென்னையின் திரும்பும் திசை எல்லாம், பன்னீரின் போஸ்டர்களும், பேனர்களும் கண் சிமிட்டின. அதே போல், வரும் 5 ம் தேதி அவர் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தை ஒட்டியும் ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வெளுத்து வாங்குகின்றன.

எடப்பாடி என்று ஒருவர் முதல்வராக இருப்பதே தெரியாத அளவுக்கும், அதிமுக என்றாலே அது பன்னீர்தான் என்ற அளவிலும் அந்த போஸ்டர்களும், பேனர்களும் இருந்ததால், எடப்பாடி அணியினர் கவலை அடைந்துள்ளனர்.

அதனால், அதிமுகவின் மற்றொரு அணியின் அடையாளமாக இருக்கும், எடப்பாடியை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டிய நிலை இருப்பதால், ப்ளெக்ஸ் பேனர்கள் அவசியம் என்று அவரிடம் பலர் கூறி உள்ளனர்.

பன்னீர் அணியினர் செய்கிறார்கள் என்பதற்காக, நாமும் அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் எளிமையான முதல்வராகவே இருந்துவிட்டு போகிறேன் என்று அவர் அடம் பிடித்துள்ளார்.

edappadi palanisamy-banner-war-against-ops

ஆனால், இப்படியே விட்டால், நிலைமை வேறு விதமாக போய்விடும் என்று, அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து நச்சரிக்க, சரி, உங்கள் இஷ்டம் என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி.

அதை தொடர்ந்தே, ஜெயலலிதா பாணியில் அவர் வரும் பாதை எல்லாம், அவர் சிரிப்பது போன்ற ப்ளெக்ஸ்களை வைத்து அசத்திவிட்டனர், அவரது ஆதரவாளர்கள்.

இனி வரும் காலங்களில், இந்த அசத்தல் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்றும் எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios