வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்ப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள். திரைப்படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் வேலையை மட்டும்தான் நடிகர்கள் பார்க்கிறார்கள். 

நாட்டில் உள்ள கிராமங்கள், மக்கள் பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்த அடிப்படையே தெரியாமல் கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக நடிகர்கள் காட்டிக்கொள்கிறார்கள். அரசியல் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? இடைத்தேர்தல் நடைபெற்ற  2 தொகுதிகளிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாதது ஏன்? எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது? தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமைதான் நடிகர்களுக்கு வரும் என ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். 

மேலும், பேசிய முதல்வர் எடப்பாடி உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தன்னாட்சி பெற்ற அமைப்பு இதில் அரசுக்கு எந்த தொடர்பு இல்லை என்றார். கால அசகாசம் குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுமக்கள் ஹெல்மட் அணிவது முக்கியமானது என தெரிவித்த அவர், காவல்துறையினரின் அறிவுரைகளை ஏற்று பொதுமக்கள் ஹெல்மட்டை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். கட்சிகளின் கொடி கம்பங்கள் நடக்கூடாது என்ற உத்தரவு இதுவரை இல்லை. 

சாலைகள் மேம்பாட்டிற்காக தமிழகத்தில் 14 சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு தெரிவித்திருந்த போதிலும் முதல் கட்டமாக நான்கு சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் பல்வேறு இடங்களில் பொது மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்கம் குறித்து அரசு உரிய முறையில் பரிசீலனை செய்து சாலைகளை மேம்படுத்தி, சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.