அதிமுக அரசின் சாதனைகள் கண்காட்சியை சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாமக அதிமுகவுடன் மட்டும் கூட்டணி வைக்கவில்லை. கூட்டணி மாறி மாறி வைத்துள்ளார்கள். திமுகவை விமர்சனம் செய்து அவர்களுடனும் கூட்டணி வைத்தார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அந்தந்த கட்சிகள் வெற்றி பெற வேண்டும். மக்களுக்குத் தேவையான திட்டங்களை அளிக்க வேண்டும். தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார். 

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாதுன்னு சொன்னவர்களிடம் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நீங்க வேணுமுன்னே குதர்க்கமா கேள்வி கேட்கிறீங்க... நல்ல கேள்வி கேளுங்க என ஆவேசமாக கேட்டுள்ளார்.

தேமுதிகவுடன் கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக் கூறினார்.

தேமுதிக வந்தாலும் மகிழ்ச்சி, வரவில்லை என்றாலும் கவலையில்லை என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே? எனக் கேட்டதற்கு பதிலளித்த அவர், அவருடைய கருத்தை நான் கேட்கவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்கள் கூட்டணியில் சேர்க்க விரும்புகிறோம் எனக் கூறினார்.


 
கடைசியாக, 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக தினகரன் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு; 38 என்ன இந்தியா முழுவதும் 543 தொகுதியிலும் போட்டியிடுவார். மிகப்பெரிய கட்சி. இன்னும் கட்சியை பதிவு பண்ணினாரா இல்லையான்னே தெரியல என இவ்வாறு கூறினார்.