அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசாரமான விவாதம் நடந்தது. கூட்ட முடிவில் அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.


 நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். தேனியிலிருந்து சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சந்தித்து தீவிர ஆலோசனையில் இன்று ஈடுபட்டனர். இதேபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சி.பி. சண்முகம், தங்கமணி,  வெல்லமண்டி நடராஜன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.அன்பழகன், கடம்பூர் ராஜூ ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.


இதனால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நாளை அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்ததைப்போல 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.