தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது என்றதுமே அதற்கான திட்டம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மேற்பார்வையில் நடைபெற்றது. சாலை மார்க்கமாக சென்றால் புயல் பாதித்த பகுதியில் மக்கள் முற்றுகையிடக்கூடும் என்று எச்சரித்த காரணத்தினால் முழுக்க முழுக்க ஆகாய மார்க்கமாகவே சென்று திரும்புவது என்று திட்டமிடப்பட்டது.

அதுமட்டும் இன்றி புயல் பாதித்த பகுதிகளிலும் கூட அ.தி.மு.க வலுவாக உள்ள இடங்களை மட்டுமே தேர்வு செய்து முதலமைச்சரை அழைத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற எடப்பாடி அங்கிருந்து புதுக்கோட்டை மாப்பிள்ளையார் குளத்திற்கு ஹெலிகாப்டரில் பறந்தார். அங்கு 15 நிமிடங்களில் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளத்தில் எடப்பாடியின் ஹெலிகாப்டர் லேன்ட் ஆனது.

அங்கும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு பேருக்கு சில தென்னை மரங்களை மட்டும் பார்த்துவிட்டு திருவாரூர் செல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமானார். ஹெலிகாப்டர் புறப்பட்ட 10 நிமிடங்களில் திருவாரூர் எல்லையை அடைந்தது. ஆனால் அப்போது கனமழை காரணமாக ஹெலிகாப்டரை தரையிறக்க முடியாத சூழல். இதனால் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பதறிப்போயினர். சரி உடனடியாக திரும்பிவிடலாம் என்றால் வானிலை மிகவும் மோசம்.

இதனால் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வானிலேயே ஹெலிகாப்டர் வட்டமடிக்க ஆரம்பித்தது. கடைசி வரை ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை. மேலும் அந்த சமயத்தில் வானம் சரியான நிலையிலும் தொடர்ந்து அதே நிலை நீடிக்குமா என்பதில் சந்தேகம் எழுந்தது. எனவே ரிஸ்க் எடுக்க விரும்பாத அதிகாரிகள் பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்று கூறி கேள்வியே கேட்காமல் திருச்சிக்கு ஹெலிகாப்டரை திருப்ப சம்மதம் தெரிவித்தார் எடப்பாடி.

சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர் திருச்சி நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது தான் அதில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆகியோரின் பரிதவிப்பு கலைந்து போனது.