மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பாஜக - அதிமுக அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றுகையில், “இந்தியாவில் ஒரே நாளில் இப்படியொரு போராட்டம் நடத்துகிற ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உண்டு. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செல்கிற திமுகவினரை காவல்துறையினர் கைது செய்துவருகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்டமெல்லாம் இன்னும் மூன்று அமாவாசைகள்தான். எந்த சிறைக்கு செல்ல வேண்டும் என்பதை அவரே முடிவு செய்யலாம். திமுகவினர் எதற்கும் அஞ்சுபவர்கள் கிடையாது. சிறைச்சாலைகளின் கதவுகளை எல்லாம் பலமுறை முத்தமிட்டவர்கள்தான்.


மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். திமுக தொண்டர்களை சேலத்தில் காவல்துறையினர் மூலம் கைது செய்து அடக்குமுறையை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இன்று எங்களைப் பார்த்து சர்க்காரியா கமிஷன் என முதல்வர் பேசுகிறார். சர்க்காரியா கமிஷன் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தெரியும்? சர்க்காரியா கமிஷன் பற்றி என்னோடு விவாதிக்க அதிமுகவினர் தயாரா? அதிமுகவினர் யார் வந்தாலும் நான் தயார்” என ஆர்.எஸ். பாரதி பேசினார்.