அதேபோல் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலும் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை அடுக்கு பாலம் பணி மீண்டும் துவங்க நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்றார். 

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் உலகத்தரம் வாய்ந்தது என காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டியதுடன், நீட் விவகாரம் பொறுத்தவரையிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றுமே புரியவில்லை என அவர் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியுடன் அது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார், தைரியமிருந்தால் என்னுடன் அவர் விவாதிக்கட்டும் என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு நீண்டகாலமாக போராடி வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 10 மாதங்கள் நிறைவடையும் நிலையிலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. ஆனால் அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு திமுக அரசு அனுப்பி வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஆளுநரை சந்தித்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வலியுறுத்தினர். இதற்கிடையில் நீட்தேர்வை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பான விவாதம் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. நீட் தேர்வு என்பது காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது, அதை நடைமுறைப் படுத்தியது தான் பாஜக என்றும் அதிமுக மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு தருணங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது விரும்பும் மாநிலங்கள் மட்டுமே நீட்தேர்வை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், விரும்பாத மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற அடிப்படையில்தான் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் அதில் பல மாற்றங்களை செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அதை கட்டாயமாக்கியது பாஜகதான். இதைதான் தமிழகம் எதிர்க்கிறது என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அதிமுக மற்றும் பாஜகவினர் குறிப்பாக அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

எங்களையும் தான் நேற்று தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை பேசியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- உயர்கல்வி பயில மூவலூர் அம்மையார் திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. கொரோனா சூழலில் மக்களின் மன உளைச்சல், சங்கடங்களை தீர்க்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது. 

அதேபோல் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலும் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை அடுக்கு பாலம் பணி மீண்டும் துவங்க நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் தான் என பேசி வருகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதுவரையிலும் நீட் விவகாரம் குறித்து ஒன்றுமே புரியவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது குறித்து இதுவரை நான் பலமுறை விளக்கம் அளித்து பேசியுள்ளேன். 

அன்று காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று ஒதுக்கியதை 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவசரஅவசரமாக பாஜக கொண்டு வந்ததுதான் இந்த நீட் தேர்வு என்றார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயார். தைரியமிருந்தால் நீட் தேர்வு யாரால் வந்தது, எப்படி வந்தது என்பதை என்னுடன் விவாதிக்க பழனிச்சாமி தயாரா என்று செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.