தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் போர் ஏற்படும், தேர்தல் தள்ளிப் போகும்! என்றெல்லாம் கிளப்பப்பட்ட பரபரப்பு அமுங்கி அடங்கிவிட்டது. 

ஆனால் தமிழக அமைச்சரவையினுள் வெடித்திருக்கும் உட்கட்சி போரினால் எந்நேரமும் பெரும் பிரளயம் வெடிக்கும்! எனும் நிலை தோன்றியுள்ளதால் கடும் அப்செட்டில் ஆழ்ந்துவிட்டார் எடப்பாடியார். பிரச்னை இதுதான்... திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவரை அந்த பதவியிலிருந்து தூக்கிவிட்டு, பக்கத்து மாவட்டமான கோயமுத்தூரின் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ஜெயராமனை அதில் அமர்த்திவிட்டனர். ராதாகிருஷ்ணனுக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் அ.தி.மு.க.வில் மிகுந்த மதிப்பு மிக்க பதவியாக கருதப்படும் மாவட்ட செயலாளர் பதவியை தன்னிடம் இருந்து பறித்ததில் கடும் கோபத்திலிருக்கிறார் அமைச்சர் ராதாகிருஷ்ணன். விளைவு, அவரது ஆதரவாளர்கள் தனி பஸ்கள் மற்றும் கார்களை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளனர். முதல்வர் மற்றும் துணை முதல்வரை பார்த்து ‘ஏன் ராதாகிருஷ்ணனை மாற்றினீர்கள்? நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் அவரை அந்த பதவியில் அமர்த்துங்கள்.’ என்று கோரிக்கை மனுவையும் தயார் செய்துவிட்டனர். தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், கட்சி நிர்வாகத்துக்கு எதிராக படைதிரட்டி பெரும் பஞ்சாயத்து செய்யும் முடிவில் இருக்கிறாராம் ராதாகிருஷ்ணன். 

தனது பதவி பறிப்புக்கு காரணமாக இவர் நினைப்பது அமைச்சர் வேலுமணியைதானாம். பர்ஷனல் காரணத்துக்காக தன்னை தூக்கிவிட்டு, பொள்ளாச்சி ஜெயராமனை அதில் நியமித்துள்ளார்! என்று வலுவாக நம்புகிறார் ராதாகிருஷ்ணன். ஏற்கனவே தனக்கும், பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் முட்டல் மோதல் வலுவாக இருக்கும் நிலையில், வேலுமணி இப்படி செய்திருப்பது மிகப்பெரிய அட்ராசிட்டி! என்று தன் ஆதரவாளர்களிடம் கடுமையாய் கொந்தளித்து வருகிறார் ராதாகிருஷ்ணன். 

தனக்கு மீண்டும் மா.செ. பதவியை வழங்காவிட்டால், தன் ஆதரவுப்படையை சேர்த்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் பெரும் பிரச்னையை செய்துவிடும் முடிவில் இருக்கிறாராம். தன்னைப் போலவே பதவியை இழந்த தூத்துக்குடியின் சி.த.செல்லபாண்டியன், நீலகிரி மாவட்டத்தின் கே.ஆர்.அர்ஜூனன் ஆகியோரிடமும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் ராதாகிருஷ்ணன் ‘கேவலம் லெட்டர் பேடு கட்சியில கூட தேர்தல் நேரத்துல இப்படியான பதவி பறிப்பு நடவடிக்கைகளை எடுக்க மாட்டாங்க. ஆனா ஆளுங்கட்சியா இருந்தும் கூட நம்ம நிலைமை இப்படியானது பெரிய அசிங்கம், அவமானம்.

 

இதற்கு காரணமான புள்ளிங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காம நாம அடங்க கூடாது.” என்று அவர்களையும் கொம்பு சீவியிருக்கிறாராம். ஆனால் நீண்டநாட்களாக தான் குறி வைத்திருந்த மாவட்ட செயலாளர் பதவி தன்னை தேடி வந்திருப்பதில் செம குஷியாக இருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன். தன்னை கவிழ்த்துவதற்காக அமைச்சர் வேலுமணியுடன் கைகோர்த்துக் கொண்டு ஜெகஜால அரசியல் வேலைகளை செய்திருக்கிறார் ஜெயராமன்! என்று பெரும் கடுப்பில் இருக்கும் ராதாகிருஷ்ணனின் உட்கட்சி ரகளை அவ்வளவு எளிதில் அடங்காது என்கிறார்கள். அ.தி.மு.க.வின் உட்கட்சிக்குள் தேர்தல் நேரத்தில் கிளம்பியிருக்கும் இந்த போரை உடனே நிறுத்தாவிட்டால் மிகப்பெரிய சரிவுகளை அக்கட்சிக்கு காட்டுவது உறுதி! என்கிறார்கள் விமர்சகர்கள். கவனிப்போம்!