’உங்க வாழ்க்கையில இனிமையான நாள் எது?’ன்னு தமிழகத்தின் பலப்பல லட்சம் குடும்ப தலைவிகளிடம் கேட்டால்...’என் புருஷன் குடிக்காமல், சம்பாதிச்ச பணத்தை உருப்படியா வீட்டுக்கு கொண்டு வர்ற நாள்தான்.’ அப்படின்னு சொல்லுவாங்க.  ராமதாஸ் சொல்வது போல் நூற்றுக்கு நூற்றியோரு சதவீதம் உண்மையான தகவல் இது. 

பூரண மதுவிலக்கு: என்பதே தமிழகத்தின் அனைத்துப் பெண்களின், கணிசமான ஆண்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. இந்த அறிவிப்பை தைரிய ஜெயலலிதா மற்றும் சாணக்கிய கருணாநிதி இருவரிடமும் எதிர்பார்த்து ஏமாந்தது தமிழகம். அவர்கள் இருவருக்கும், ‘டாஸ்மாக்கை மூடினால், கஜானா காலியாகுமே! பின் எப்படி அரசை நடத்துவது? கள்ளச்சாராயம் பெருக்கெடுக்குமே!’ எனும் கவலை இருந்தது. அதனாலேயே பூரண மதுவிலக்கு திட்டம் தள்ளிக் கொண்டே போனது. ஆனால் இப்போது தமிழகத்தை  ஆண்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, மதுவிலக்கை விரைவில் கொண்டு வருவார்! என்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை கழகத்தில் நிர்வாகிகள் மத்தியில் இப்போது ஒரு பேச்சு எழுந்துள்ளது.

 

ஒரு நாளும் இல்லாத திருநாளாக இந்த பேச்சு எழக்காரணம்...’மதுக்கடைகளை காலையில் திறப்பதற்கு பதில் மதியம் திறந்தால் என்ன?’ என்று உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது சமீபத்தில். இதைத் தொடர்ந்து,  தனக்கு மிக நெருக்கமான இரு அமைச்சர்கள் மற்றும் விசுவாசமான அரசுச் செயலர்கள் சிலரிடம் எடப்பாடியார்  ஒரு ஆலோசனை நடத்தினார், அதன் அடிப்படையில் சில முடிவுகளை எடுத்திருக்கிறார், அதன்படி பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் இனி டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளார் முதல்வர்! என்று பேசுகிறார்கள். 

ஒரு வேளை இது நிஜமானால்... ‘பாதி வேலை பார்த்துட்டு இருக்குறப்பவே டாஸ்மாக்குக்கு வந்து குடிச்சுட்டு வீதியில விழுந்து கிடக்குறான் என் புருஷன்! டவுன் பஸ்ஸுக்கு வெச்சிருந்த பணத்துல ஷேரிங் கட்டிங் அடிச்சுட்டு மரத்தடியில உட்கார்ந்துட்டான் என் மவன்.’ என்று விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த பல லட்சம்  பெண்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் வரமாக அமையும். அரசு விளம்பரத்தில் வந்த்து போல் அவர்கள் எடப்பாடியாரை உண்மையிலேயே ‘நம்ம சாமி! எடப்பாடி பழனிசாமிதான்’ன்னு போற்ற துவங்கிடுவாங்க...என பரபரக்கிறார்கள். 

”முதல்வர் இந்த அறிவிப்பை சாதாரணமாக அறிவிக்காமல், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பில் சேர்த்து வெளியிட்டு கலக்கிட வாய்ப்புள்ளது. இதன் மூலம் பல லட்சம் குடும்ப பெண்களின் வாக்குகள் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக்கு கண்ணை மூடிக்கொண்டு விழும். இது தி.மு.க. தலைமையிலான எதிர்கட்சி கூட்டணிக்கு மிகப்பெரிய அடியாக அமையும். 21 தொகுதி இடைத்தேர்தலிலும் இந்த அறிவிப்பு கழகத்தின் ஆட்சியை காப்பாற்ற உதவும். அதேபோல் அடுத்து வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கும் இது கைகொடுக்கும். கூடவே இன்னும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. 

அப்போது, இதை விட சிறப்பாக ‘நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு.’ எனும் அறிவிப்பை எடப்பாடியார் வெளியிட்டால், முழுமையாய் நம்பி வாக்களிப்பார்கள் பெண்கள். ஆக கருணாநிதிக்கு வராத தைரியமும், அம்மாவிடம் இருந்த தயக்கமும் எடப்பாடியாருக்கு இல்லை, அவரு இந்த அதிரடி அறிவிப்பு மூலமா அடிச்சு தூக்கப்போறார் தேர்தலை.” என்று ஏக குஷியாகிறார்கள் அத்தொண்டர்கள். 

ஆனால் தி.மு.க.வினரோ ‘ பூரண மதுவிலக்கு சாத்தியமே இல்லை. அட்சய பாத்திரத்தை எவன் அடிச்சு உடைப்பான்? கடந்த சட்டமன்ற தேர்தலில் பூரண மதுவிலக்கு விஷயத்தை நாங்கள் ப்ரமோட் செய்த காரணத்தினால்தான் பெருவாரியான ஆண்களின் ஓட்டுக்கள் எங்களுக்கு விழாமல் போனது. அதே நிலைதானே எடப்பாடி தரப்புக்கும் நேரும். மேலும் டாஸ்மாக் கடைகள் நேரக்குறைப்பு குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆக முழுக்க முழுக்க அ.தி.மு.க.வினர், தேர்தலுக்காக கொடுக்கும் பில்ட் அப் இவை.” என்கிறார்கள் நெத்தியடியாக. பூரண மதுவிலக்கு! நினைத்தாலே இனிக்கிறது.