edappadi new treatment for those who asking minister post

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி வார்த்தையில் சொன்னால், அம்மா பிடித்து வைத்தால், சாணியும் பிள்ளையார். வீசி எறிந்தால், பிள்ளையாரும் சாணிதான்.

ஜெயலலிதா இருந்த வரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரின் நிலையும் அப்படிதான் இருந்தது. ஆனால், அவரது மறைவுக்கு பின்னர், அதிமுகவின் நிலையே தலை கீழாக மாறிவிட்டது.

கூவத்தூர் கூத்துகளுக்கு பிறகு, அமைச்சர் பதவி என்ற கனவில் இருக்கும் சிலர், எனக்கு இத்தனை எம்.ஏ;.ஏ க்கள் ஆதரவு இருக்கிறது, அத்தனை எம்,எல்.ஏ க்கள் ஆதரவு இருக்கிறது என, முதல்வர் எடப்பாடியை மிரட்டுவது அண்மைக்காலமாக வாடிக்கையாகி விட்டது.

நேற்று முன்தினம், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ க்கள், எடப்பாடியை சந்தித்தது போல, நேற்றும் 10 எம்.எல்.ஏ க்கள், எடப்பாடியை சந்தித்து பேசியுள்ளனர்.

வழக்கம் போல, தொகுதி பிரச்சினையை பற்றிதான் பேசினோம் என்று சொன்னாலும், எடப்பாடியை ஆழம் பார்க்க, செந்தில் பாலாஜி செய்த வேலைதான் இது என்றே சொல்லப்படுகிறது.

பன்னீர் ஆதரவாளர்கள் கொடுக்கும் நெருக்கடி ஒரு பக்கம், தினகரன் ஆதரவாளர்கள் குடைச்சல் மறுபக்கம், கூடவே இருந்து கொண்டு இடையூறு கொடுப்பவர்கள் இன்னொரு பக்கம் என, எடப்பாடிக்கு நாளுக்குநாள் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எனவே, தமது முதல்வர் பதவியை தக்கவைத்து கொள்வதற்கே போராடி வரும் எடப்பாடி, இது குறித்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

சின்னம்மாவை எதிர்த்து பன்னீர் போனபோது, அவருடன் எத்தனை பேர் சென்றார்கள். அதேபோல், இவர்கள் போனாலும், யாரும் அவர்களுடன் செல்ல மாட்டார்கள், எல்லோரும் அமைச்சர் பதவி கேட்டு மிரட்டினால், கொடுத்துவிட முடியுமா? என்று எடப்பாடி அவர்களிடம் கூறி இருக்கிறார்.

மேலும், இப்படி பிளாக் மெயில் செய்யபவர்களுக்கு ஒரு “ஷாக் ட்ரீட்மெண்ட்” கொடுத்தால்தான் மற்றவர்கள் அடங்குவார்கள். அதற்கு என்ன செய்யவேண்டும்? என்று எடப்பாடி அவர்களிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு, செந்தில் பாலாஜி, தோப்பு, பழனியப்பன் உள்ளிட்டவர்களை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு, முதலில் தனிமை படுத்தி செல்லா காசாக்கவேண்டும்.

அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ க்களுக்கு, அவர்கள் எதிர்பார்ப்பதை விட, கூடுதலாக செய்து கொடுத்து, நம்முடைய ஆதரவாளர்களாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி ஆலோசனை கூறி இருக்கிறார்.

வேலுமணி சொன்னதை கேட்டு, அதுவும் சரிதான், நானும் எம்.எல்.ஏ க்களுடன் பேசுகிறேன், அவர்களின் தேவையை அறிந்து, நாமும் செய்து கொடுக்கலாம் என்று செங்கோட்டையன் கூறி இருக்கிறார்.

எனவே, எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கும் எம்.எல்.ஏ க்களுக்கு இனி ஷாக் ட்ரீட்மெண்ட் உறுதி என்றே தெரிகிறது.