சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், “மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டைப் பார்த்து நான் மலைத்துப் போயிருக்கிறேன். நீ அப்பனை மிஞ்சிவிடுவாய் என்று மு.க.ஸ்டாலினைப் பார்த்து அண்ணா ஒரு நாள் சொன்னார். அது இன்று சரியாகிவிட்டது. கருணாநிதி இல்லாமல் இந்த இயக்கத்தை மிகக் கட்டுக்கோப்போடு ஸ்டாலின் நடத்தி வருகிறார். எந்தக் கட்சி நிர்வாகிகளுடனாவது தலைவர்கள் தொலைபேசியில் பேசியதுண்டா? இதேபோல காணொளி காட்சி மூலம் மக்களைச் சந்திக்கிறார்.
அதிமுகவின் ஊழலை வெளிப்படுத்துவதில் ஆண்மை உள்ள தலைவனாக ஸ்டாலின் விளங்குகிறார். வருங்காலத்தில் ஸ்டாலின் மீண்டும் வியூகம் வகுக்க வேண்டும். இந்த ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுக்க வேண்டுமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். எம்.ஜி.ஆரையே நாடாளுமன்றத்தில் ஜீரோ வாங்க வைத்த இயக்கம் திமுக. ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற மன்னாதி மன்னர்களையும் தூளாக்கியர்கள்தான் திமுகவினர். 
கட்சியில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒன்றே லட்சியம்தான் இருக்க வேண்டும். அது, ஸ்டாலின் கோட்டைக்குச் செல்லவேண்டும் என்பதுதான். என்னைவிட ஸ்டாலின் வயதில் இளையவர். இருப்பினும் ஸ்டாலினைப் பார்த்து தலைவா என்று கையெடுத்துக் கூம்பிடுகிறேன். ஆட்சியில் இருப்பவர்களுக்கு சிம்மசொப்பனமாக ஆட்டிப் படைக்கிறார் ஸ்டாலின். இன்று எம்ஜிஆர்தான் எடப்பாடியா, ஜெயலலிதாதான் ஓபிஎஸ்ஸா? இவர்களெல்லாம் திமுகவின் மூச்சுக்குகூட தாங்க முடியாத துரோகிகள்” என்று துரைமுருகன் பேசினார்.