கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக உடனடியாக 1,500 கோடியும் நிரந்தரத் தீர்வுக்கு 15,000 கோடியும் பிரதமரிடம் கேட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாம் கூறினார்.

டெல்லியில் இன்று பிரதமருடனான சந்திப்பு முடிந்தவுடன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர், ‘தானே புயலை விட பத்துமடங்கு அதிக சேதாரத்தை கஜா புயல் ஏற்படுத்தியுள்ளது. இப்புயலால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 63 பேர் இறந்துள்ளனர்.

புயல் பாதிப்பின் அத்தனை விபரங்களும் பிரதமருக்கு விபரமாக எடுத்துச்சொல்லி அவசர உடனடி உதவியாக ரூ 1,500 கோடியையும், நிரந்தரத்தீர்வுக்காக 15,000 கோடி ரூபாயும் தேவை என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பரிவுடன் கேட்டுக்கொண்ட பிரதமர் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இதேபோல் கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதையும் உடனே செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

நான் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததையும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முற்றிலும் பார்வையிடவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் சொல்வதில் உண்மை இல்லை. ஹெலிகாப்டர் பயணத்தால்  மட்டுமே முழுமையான பாதிப்புகளை அறிந்துகொள்ள முடியும். நிவாரணப்பணிகளில் தி.மு.க.வை விட நாங்கள் அதிக அக்கறையுடன்தான் செயல்பட்டுவருகிறோம்’ என்றார் முதல்வர்.