edappadi meeting with ministers

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஓபிஎஸ் அணி தனி ராஜாங்கம் நடத்தி வந்தது.

ஒபிஎஸ் அணியை எடப்பாடி அணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்தது. 

இதனால் ஒபிஎஸ் பேச்சுவார்த்தை தோல்வி எனவும் அணிகள் இணையாது எனவும் அறிவித்தார். இதனிடையே ஓபிஎஸ் அணியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எடப்பாடி தரப்பினர் சொல்லி வந்தனர். அதன்படி தினகரனை முற்றிலும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

மேலும், நேற்று ஜெ மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கபடும் எனவும், வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். 

இதையடுத்து இன்று மாலை ஒபிஎஸ் தமது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அமைச்சர்கள் 2 பேர் ஒபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

இதனைதொடர்ந்து தற்போது அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் பெரும் பரபரப்பு தமிழகத்தை மீண்டும் தொற்றிக்கொண்டுள்ளது.