அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், வரும் 5ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். இதனால், அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுதொடர்பாக இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமைச்சர் வேலுமணி, அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும்,  ஓ.பி.எஸ். எங்களது சகோதாரர் என்றார். அதேபோல் திவாகரன், ஓ.பன்னீர்செல்வம் எங்களது பங்காளி. அவர் எப்போது வேண்டுமானாலும் எங்களுடன் இணையலாம் என்றார்.

ஏற்கனவே இரு அணிகள் இணையும் என எதிர் பார்த்தபோது, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதற்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் டிடிவி.தினகரன், இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்வேன் என கூறியதால், அதிமுக அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. அதில் மதுசூதனன், மாபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைமை செயலாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்பட 8 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவின் ஒவ்வொரு அணியினரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதால், தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.