மக்களுக்கு நல்லது செய்யாவிட்டால் மு.க. ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.21 அன்று நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் பிரசாரத்தைத் தொடங்கினார். விக்கிரவாண்டி தொகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய பழனிசாமி, பல்வேறு இடங்களில் பேசினார்.


முண்டியம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ நான் முதல்வரானது விபத்து என மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அதிமுகவினர் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள். அவரைப்போல தந்தையின் மூலம் தலைமை பொறுப்புக்கு வந்தவர்கள் கிடையாது. அதிமுகவினர் பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. உண்மையைச் சொல்லபோனால், ஸ்டாலின் திமுக தலைவரானதே ஒரு விபத்து.

 
எதற்கெடுத்தாலும் அதிமுகவை ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். முதலில் எங்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள். மக்களுக்கு நல்லது செய்யவிடுங்கள். மக்களுக்கு நல்லது செய்யாவிட்டால் மு.க. ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது. தற்போது திமுகவினர் திண்ணைப் பிரசாரத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஆட்சியில் இருந்தபோது இப்படி வந்தார்களா? அவர்களுடைய பிரசாரத்தால் ஒரு பயனும் இல்லை” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.